நூதன கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!
கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று முன்தினம் (08) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த மாதம் 28 ஆம் திகதி கந்தளாய் நகரில் அமைந்துள்ள ஒரு நகைக்கடைக்குள் குறித்த பெண் நுழைந்துள்ளார்.
திருட்டு
நகை பார்ப்பது போல கடை உரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு, வாயில் மறைத்து வைத்திருந்த போலி தங்க மோதிரத்தை காட்சிப் பெட்டியில் வைத்துள்ளார்.
அதேசமயம், பெட்டியில் இருந்த உண்மையான தங்க மோதிரத்தை எடுத்து மறைத்துள்ளார்.

மேலும் ஒரு தங்க மோதிரம் மற்றும் காதுப்பு ஜோடி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, ரூ. 2,000 முற்பணம் மட்டும் கொடுத்துள்ளார். "மீதிப் பணத்துடன் பின்னர் வந்து எடுத்துச் செல்கிறேன், இவற்றை தனியாக வைத்திருங்கள்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.
இதேபோல தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிலும் இதே தந்திரத்தைக் கையாண்டுள்ளார்.
இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ரூ. 3,95,000 பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
பெண் சென்ற பிறகு மோதிரம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட கடை உரிமையாளர், அதனைப் பரிசோதனை செய்தபோது, அது போலி மோதிரம் என்றும், உண்மையான தங்கம் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பெண் மற்றும் அவருடன் மற்றொரு பெண் கந்தளாய் நகரில் உள்ள வேறொரு நகைக்கடைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதை பொதுமக்கள் கவனித்துள்ளனர்.

தகவல் கிடைத்த கடை உரிமையாளர் உடனடியாக அங்கு சென்று, பொதுமக்களின் உதவியுடன் குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில், கைது செய்யப்பட்ட இந்த இரண்டு பெண்களும் இதற்கு முன்னரும் பல நகைக்கடை திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கந்தளாய் பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.