வவுனியா இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியாளருக்கு அச்சுறுத்தல்
வவுனியா (Vavuniya), தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருடன் தொடர்பில் உள்ள பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக வழக்கின் சாட்சியாளர் தெரிவித்துள்ளார்.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த யூலை மாதம் 23ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் உயிரிழந்திருந்தனர்.
குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
பெண் கிராம அலுவலர்
குறித்த வழக்கு விசாரணை வவுனியா நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற வீட்டு உரிமையாளரான சுரேஸ் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளித்திருந்தார்.
குறித்த சாட்சியத்தில் தனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று தற்போது கல்வி கற்று வரும் சுரேஸின் மகள், சந்தேக நபரை அடையாளம் காட்டியிருந்தார்.
இதன் பின் குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபருடன் தொடர்புடைய பெண் கிராம அலுவலர் எனது மகள் கல்வி கற்க செல்கின்ற போது அங்கு நின்று மகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக சுரேஸ் கூறியுள்ளார்.
அடுத்த தவணை
குறித்த பெண் கிராம அலுவலரால் அச்சுறுத்தல் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், குறித்த பெண் கிராம அலுவலர் சம்பவத்தின் போது மரணமடைந்த சுகந்தன் அவர்களுடன் முன்னர் இணைந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
அதன் பின்னர், சுகந்தனின் நண்பரும் பிரதான சந்தேக நபருமாகிய தடுப்பில் உள்ள நபர், குறித்த கிராம அலுவலரை காதலித்து தான் அழைத்து சென்று வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்ததுடன், அதனால் ஏற்பட்ட முரண்பாடே இக் கொலைக்கு காரணம் எனவும் சாட்சியமளித்திருந்ததாக தெரிவித்தார்.
இந்த வழக்கு அடுத்த தவணைக்காக ஜூன் மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களுக்கு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |