உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்! ஜனாதிபதி ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் சாட்சி விசாரணைகள் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. இன்றைய தினம் இரு சாட்சியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சாட்சி விசாரணைகளைத் தொடர்ந்து இவ்விசாரணை நிறைவுக்கு வந்துள்ளது.
அதன்படி ஆணைக் குழுவின் இறுதி அறிக்கை இம்மாதம் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் ஜனாதிபதியிடம் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இன்றைய தினமும் சாட்சி விசாரணைகளுக்கு அழைக்கப்பட்ட போதும் சுகயீனம் காரணமாக சாட்சியளிக்க வர முடியாமல் போனதாக கூறப்படும் சி.ஐ.டி.யின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சாட்சியம் முக்கியமாக கருதப்படும் நிலையில், இதுவரை அது பதிவு செய்யப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, 2019 ஏப்ரல் 21 அன்று கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.
மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன.
39 வெளிநாட்டவர்கள், மூன்று பொலிஸார் உட்படக் குறைந்தது 253 பேர் வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கொச்சிக்கடை, மட்டக்களப்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் உயிர்த்த ஞாயிறு திருப்பலி நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.