ஜெர்மனியிலிருந்து அமெரிக்கத் துருப்புக்கள் வெளியேற்றம்: நேட்டோ அதிர்ச்சி - ட்ரம்பின் அதிரடி நடவடிக்கை
ஜெர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள 5,000 அமெரிக்கத் துருப்புக்களைத் திரும்பப் பெறுவதற்கான வாஷிங்டனின் முடிவு "முன்கூட்டியே கணிக்கக்கூடிய ஒன்றுதான்" என்று ஜெர்மனி பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவிடம் நேட்டோ இராணுவக் கூட்டணி முறையான விளக்கத்தைக் கோரியுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பிஸ்டோரியஸ், "ஐரோப்பாவிலும், குறிப்பாக ஜெர்மனியிலும் அமெரிக்கப் படையினர் இருப்பது எமது நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் பொதுவான நலன் சார்ந்தது" என்பதை வலியுறுத்தினார்.
இதனிடையே, அமெரிக்காவின் இந்த முடிவின் பின்னணியிலுள்ள விரிவான விபரங்களைப் புரிந்துகொள்ள தாம் வாஷிங்டனுடன் இணைந்து பணியாற்றி வருவதாக நேட்டோ செய்தித் தொடர்பாளர் அலிசன் ஹார்ட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கப் படைகள்
ஈரானுடனான தற்போதைய போரில் அமெரிக்கா அந்நாட்டு பேச்சுவார்த்தையாளர்களால் "அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக" ஜெர்மனி ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தெரிவித்த கருத்தை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்த நிலையிலேயே இந்தத் துருப்புக்கள் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஜெர்மனியில் 36,000-க்கும் அதிகமான அமெரிக்கத் துருப்புக்கள் தீவிரப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய படைப்பிரிவாகும். இத்தாலியில் 12,000 வீரர்களும், ஐக்கிய இராச்சியத்தில் 10,000 வீரர்களும் மட்டுமே உள்ளனர்.
இதற்கிடையில், இத்தாலி மற்றும் ஸ்பெயினிலிருந்தும் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெற ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஐரோப்பாவிலிருந்து விலகி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் தனது இராணுவக் கவனத்தைச் செலுத்தத் திட்டமிட்டுள்ள ட்ரம்ப், கடந்த ஆண்டு ருமேனியாவிலிருந்தும் அமெரிக்கப் படைகளைக் குறைத்திருந்தார்.
அமெரிக்காவின் இத்தகைய தொடர்ச்சியான முடிவுகள் 32 நாடுகளைக் கொண்ட நேட்டோ கூட்டணியைப் பலவீனப்படுத்தும் என்ற கவலை தற்போது சர்வதேச ரீதியில் எழுந்துள்ளது.