கோபத்துடன் நடந்துகொண்ட கோட்டாபய! பதவி பறிக்கப்பட்டதன் பின்னர் பல தகவல்களை அம்பலப்படுத்தும் விமல்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சு பொறுப்பில் அல்ல. திருடுவதிலேயே தந்திரமானவர் என்று முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
பதவி வந்ததும் ஜனாதிபதி, இரட்டை பிரஜாவுரிமைக்கொண்டவர்கள் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்படக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் புதிய அரசியலமைப்பை கொண்டு வரப்போவதாக உறுதியளித்திருந்தார்.
எனினும் அதனை அவர் நிறைவேற்றவில்லை என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அரசாங்கத்தை பொறுத்த வரையில் அது தனிஆள் தீர்மானத்தின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகிறது.
ஒரு விடயத்துக்கு எதிராக கருத்துக்கூறும் போது அதனை செவிமடுக்க அரசாங்கத்தின் தலைமை தயாராக இல்லை. ஜனாதிபதி தம்மையும், உதய கம்மன்பிலவையும் பதவியில் இருந்து நீக்கியமை குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது அதிருப்தியை வெளியிட்டதாகவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கு முரணாகவே இந்த முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இனிவரும் காலத்தில் ஒரு நிமிடமேனும் கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்க தமக்கு விருப்பமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே கொரோனா நாட்டில் தீவிரமடைந்திருந்தபோது, நாட்டை முடக்கவேண்டும் என்று தாம், உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கோரியபோது அதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தமது கோபத்தை தொலைபேசியின் மூலம் வெளிக்காட்டியதாக வீரவன்ச தெரிவித்தார்.
தமக்கு தொலைபேசியில் பேசிய கோட்டாபய, நாட்டை முடக்கக்கூறுவது தம்மிடம் பதவி விலகல் கடிதத்தை கோரியதாக குறிப்பிட்டார். அதேபோன்று உதய கம்மன்பிலவிடமும், வாசுதேவ நாணயக்காரவிடமும் கோட்டாபய கோபத்துடன் நடந்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ச தம்முடன் தொடர்புகொண்டபோது, தாம் பதவிவிலகல் கடிதத்தை எழுதிக்கொண்டிருப்பதாக கூறியதாகவும், எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத மஹிந்த ராஜபக்ச, ஒவ்வொருவரும் கூறுவதற்கு அமைய நடந்துகொள்ளமுடியாது என்று தம்மிடம் தெரிவித்ததாகவும் விமல் வீரவன்ச இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
இதேவேளை தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தாம் அமைச்சராக இருந்தாலும் பணிகளில் ஈடுபடப்போவதில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இன்று செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டார்.
எனினும் இதன்போது கருத்துரைத்த உதய கம்மன்பில, தம்மையும் பதவி விலக்குமாறு வாசுதேவ நாணயக்கார இதன்மூலம் கோருவதாக குறிப்பிட்டார்.
இதற்கிடையில் அரசாங்கத்தில் தொடர்ந்து இருப்பதா எ்ன்பது குறித்து அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகளும் முடிவெடுக்கவுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.



