அப்பாவி இளைஞன் மீது விளையாடும் பயங்கரவாத தடை சட்டம் ஒழியுமா..!
நாட்டில் 1979 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு கோரி அண்மைக்காலமாக பல்வேறு தரப்பிலிருந்தும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
இலங்கையில் பல சட்டங்கள் காணப்படுகின்றது இருந்த போதிலும் பயங்கரமானதொரு சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் இருப்பது பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதை அண்மையில் கைது செய்யப்பட்ட இளைஞனான முஹம்மது ருஸ்தியின் கைதை காணமுடிகிறது .
குறித்த 22 வயதான இளைஞர் ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டியதன் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மூன்று மாத காலம் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
இக் கொடிய சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் என பல அமைப்புக்கள் பல சமூகத்தினர் பல போராட்டங்களை தொடர்ந்து அழுத்தமாக கூறிய போதிலும் அது தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலும் ஒழிக்கப்படாமை வேதனையளிக்கிறது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தெரிவிக்கையில்,
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டுவது பயங்கரவாதமா? அநுர குமார இதற்காக பதிலை அளிக்க வேண்டும் என்பதுடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இது விடயத்தில் இரட்டை வேடம் போடுகின்றது பலஸ்தீன மக்கள் சுமார் 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதில் 20ஆயிரம் பேர் சிறுவர் பெண்களாவர் இதனை தடுக்க பலர் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் கடந்த அரசாங்கத்தில் எதிர்கட்சியாக செயற்பட்ட தேசிய மக்கள் சக்தி எங்களுடன் இணைந்து பலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடினார்கள் தற்போதைய கொள்கையை புரியமுடியவில்லை கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
கைது செய்யப்பட்ட இளைஞரை விடுதலை செய்யகோரிய பல போராட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
கொழும்பில் பொலிஸ் தலைமையகம் முன்பாகவும் மற்றும் திருகோணமலை போன்ற இடங்களிலும் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறான அப்பட்டமான பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான அப்பாவி இளைஞன் கைது செய்யப்பட்டது தொடர்பாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிக்கையில்,
ருஸ்தி மேல் பாயும் பயங்கரவாத தடை சட்டம் அடிப்படைவாத பிக்குகளின் மீதும் பாயுமா ? ருஸ்தியின் கைதுக்கு பின்னால் பாரிய அரசியல் நிகழ்ச்சி நிரல் ஒன்று உள்ளதாகவே நினைக்கிறேன்.
ஸ்டிக்கர் ஒட்டியதுக்கு பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வு கவிதை எழுதிய அஹ்னாப் ஜெசீம் முஸ்லிம் இளைஞன் கோட்டபாய அரசால் பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்ட நிகழ்வையே நினைவு கூறுகிறது.
தற்போது இந்த கைதுக்கு பொலிசாரால் சொல்லப்பட்ட காரணத்தை பார்க்கும்போது அவர்கள் ருஸ்தியை குற்றவாளியாக்க காரணத்தை தற்போது தேடுவதாகவே உணர்கிறேன் பொலிஸாரின் கூற்றுப்படி அவர் அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருப்பின் ஸ்டிக்கர் ஒட்டும்வரை அவர் ஒரு அடிப்படைவாதி என அவர்களுக்கு தெரியாது.
இலங்கையில் ருஸ்தி மட்டும்தானா அடிப்படைவாத கருத்துக்களை கொண்டிருக்கிறார்.ஒவ்வொரு சமூகத்திலும் தாம் சார்ந்த சமூகத்தின் அடைப்படைவாத கருத்துக்களை கொண்ட பலர் உள்ளனர்.
அவ்வாறு எனில் அவர்கள் அனைவரையும் கைது செய்ய முடியுமா.அடிப்படைவாத கருத்துக்களை வெளிப்படையாக கூறும் பிக்குகளின் மீது இந்த சட்டம் பாயுமா இஸ்ரேலின் இராணுவ வீரர்கள் ஓய்வு பெறும் இஸ்ரேலிய கொத்தனியாக இலங்கை மாறிவருவதை நாம் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உள்ளோம்.அவர்களின் வணக்கஸ்தலங்கள் நிறுவப்படுவதையும் அவர்களின் ஆக்கிரமிப்பு செயற்பாடுகளையும் கூறியுள்ளோம்.
அதற்கான நடவடிக்கை ஒன்றையும் இந்த அரசு மேற்கொள்ளவில்லை.அது ஏன் என்பது இந்த கைது மூலமாக தெளிவாகிறது இஸ்ரேலுக்கு எதிராக ஒரு ஸ்டிக்கர் ஒட்டியதுக்கே பயங்கரவாத சட்டம் எனில் இந்த அரசு இஸ்ரேலின் பாதுகாவலனாகவே செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவோம் ,இன மத பேதமற்ற அரசு என்ற கோஷங்களுடன் ஆட்சிக்கு வந்த இந்த அரசு தற்போது அதே பயங்கரவாத சட்டத்தையே ராஜபக்சக்களை விட மோசமாக பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறது.இந்த இரட்டை வேடத்துக்கு விரைவில் மக்கள் பதில் வழங்குவார்கள்.ருஸ்தியின் விடுதலைக்காக நாம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
எதிரான குற்றச்சாட்டுக்கள்
இவ்வாறான நிலை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,
“மொஹம்மது ருஸ்தி என்பவர் புனர்வாழ்வு அழிக்கப்பட வேண்டியவர்" என அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை கூறியதாக சிங்கள BBC ஊடகத்துக்கு தெரிவித்திருந்தார்.
இந்த கருத்தானது முற்றிலும் பொய்யானது என உலமா சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது.
இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்பாக பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடர்ந்தேர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்.இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்.
அண்மையில் பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டிக்கும் வகையில் ஒரு சுவர் ஒட்டியை- ‘ஸ்டிக்கரை’ ஒட்டியதற்காக ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் சமூகத்தை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது சமூக ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக இல்லாதவரை, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போது அதிகாரிகள் குறித்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் ஜம்இய்யா வலியுறுத்துகின்றது.
நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும் கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது.அவற்றை நமது செயற்குழு ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.
நமது நாட்டின் அனைத்து பிரஜைகளும் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதிக்காதவாறு செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த பயங்கரவாத சட்டம் சிறுபான்மை சமூகம் மீது அதிகம் பாய்கிறது இதன் மூலமாக அரசியல் கைதிகள் உள்ளிட்ட பல அப்பாவி இளைஞர்கள் பல வருட காலமாக சிறைத் தண்டனையை பெற்று வருகின்றனர்.
பயங்கரவாத தடைச் சட்டம்
இந்த சட்டம் ஒழிக்கப்பட வேண்டும் தற்போதைய அரசாங்கம் முஸ்லிம் சமூகம் மீதுவஞ்சிக்கப்பகுவதை ஏற்க முடியாத நிலை தொடர்பில் திருகோணமலை மாவட்ட அனைத்து பள்ளிவாயல்களின் சம்மேளன செயலாளர் எம்.எம்.மஹ்தி தெரிவிக்கையில்
இன அழிப்பை மேற்கொண்டு வருகின்ற இஸ்ரேலின் செயற்பாடுகளை கண்டித்து ஸ்டிக்கர் ஒட்டியதன் அடிப்படையில் முகமது ருஸ்தி என்பவர் அண்மையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் செயற்பாடு இந்த அரசாங்கத்திடம் முஸ்லிம் சமூகம் வைத்திருந்த எதிர்பார்த்த எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் ஏமாற்றமானதாகும் அவ்வாறு இருக்கின்ற போது இலங்கையின் தற்போதைய அநுர குமார அரசை உருவாக்க இந்நாட்டு முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பினை செய்திருக்கின்றார்கள்.
இருந்த போதிலும் அப்பாவி இளைஞன் முஹம்மது ருஸ்தியை ஒரு ஸ்டிகர் ஒட்டியதற்காக கைது செய்து முதற்கட்டமாக பயங்கரவாத சட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு சிறைப்படுத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
இதேபோன்றுதான் கோட்டா அரசாங்கத்தில் வேண்டுமென்று குற்றஞ் சாட்டப்பட்டு பல அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டார்கள். கவிஞன் அஹ்னாப் ஜெசீம், ஹிஜாஸ் ஹிஸ்புள்ளா, வைத்தியர் ஷாபி சிஹாப்தீன், ஹஜ்ஜுல் அக்பர், ஆசாத் சாலி, ரிஷாட் பதியுதீன் போன்று பலர் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள். கைதுகள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்தின் மீதான பலி வாங்குகின்ற ஒரு நடவடிக்கையாகவே அரங்கேற்றப்பட்டன.
ஏனென்றால் இச்சம்பவங்கள் குறித்து நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நடைபெற்ற வாத பிரதிவாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படாமல் ஒவ்வொருவராக குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
ஆகவே மேற்குறித்த கைதுகள் அனைத்துமே முஸ்லிம் சமூகத்தின் மீதான இனவெறி செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
அதேபோன்றுதான் தற்போது அதிகமான முஸ்லிம்களின் வாக்கு பலத்தினால் தெரிவு செய்யப்பட்ட அநுர குமார அரசும் உண்மையாக ஏற்றுக்கொள்ளக் கூடிய குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் வேண்டுமென்றே முகம்மது ருஷ்தி அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெட்டத் தெளிவாக புலப்படுகின்றது.
எனவே இந்நாட்டின் ஜனாதிபதி அவர்கள் சட்டமா அதிபரின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு வருவதன் மூலம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி உடனடியாக அந்த இளைஞனை விடுதலை செய்ய நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை இந்நாட்டு முஸ்லிம்கள் சார்பாகவும் ஜனநாயகத்தை விரும்புகின்ற மனிதாபிமான சக்திகளின் சார்பாகவும் இந்த அரசாங்கத்திடம் முன்வைக்கின்றேன் என்றார்.
ருஸ்டி என்ற இளைஞன்
மேலும் அப்பாவி இளைஞனின் கைது தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவிக்கையில்,
ருஸ்டி என்ற இளைஞனை கைதுசெய்த பின்னர் அரசாங்கம் அவருக்கு எதிரான சாட்சியங்களை தேடியலைகின்றது போல தோன்றுகின்றது என தெரிவித்துள்ள முஸ்லீம் இளைஞன் கைது அரசாங்கத்தின் இஸ்ரேல் தொடர்பான பாலஸ்தீனம் தொடர்பான நிலைப்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றது.
என தெரிவித்துள்ளார்.கடந்த கால அரசாங்கம் முதல் தமிழ் முஸ்லீம் சமூகத்தையை பலிவாங்குகிறது ஆட்சிக்கு மாறி மாறி வருகின்ற அரசாங்கம் இந்த சட்டத்தை மாத்திரம் ஒழிக்கவில்லை ஞானசார தேரர் உட்பட பலரின் பல போக்குகளை கொண்ட இனவாதத்தை கக்குகின்ற போதும் நாட்டில் அவர்கள் சாதாரண சட்டத்தின் கீழே கைது செய்யப்பட்டார்கள் பயங்கரவாத சட்டம் அவர்கள் மீது பாயவில்லை .
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர்
இது குறித்து சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான சுவஸ்திகா அருளிங்கம் கூறுகையில்
முஸ்லீம் இளைஞனின் கைது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் பயங்கரவாத தடைச்சட்டத்தை துஸ்பிரயோகம் செய்கின்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்களில் கருத்துவெளிப்பாட்டில் ஈடுபட்டான் என தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேலியர்களிற்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் என்றால் அது யூத எதிர்ப்பு.இந்த நாட்டில் வெறுப்பு பேச்சுக்கு எதிராக சட்டங்கள் உள்ளன, அந்த இளைஞன் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தால் அந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்திருக்கவேண்டும்.
நான் இவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளை நம்புகின்றேன் என தெரிவிக்கவில்லை ஆனால் அந்த இளைஞர் அவ்வாறு செயற்பட்டிருந்தால் குறிப்பிட்ட சட்டங்களின் கீழ் இந்த விவகாரத்தை கையாண்டிருக்கவேண்டும்.
வெறுப்பு பேச்சுக்காக மக்களை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைதுசெய்கின்றீர்கள் என்றால் நாட்டில் அதிகளவான மக்களையும், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்களையும் இதற்காக கைதுசெய்யவேண்டும்.வெறுப்பு பேச்சு என்பது தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக நாங்கள் கேள்விப்படாத விடயம் இல்லை.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லீம்கள் எவ்வளவு குரோத பேச்சுக்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது என்பது எங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.அவ்வாறான வெறுப்பு பேச்சுக்களில் ஈடுபட்ட எத்தனை பேர் கைதுசெய்யப்பட்டனர் என்பது கேள்விக்குரிய விடயம்.
ஆகவே நாங்கள் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஆபத்தினை பார்க்கின்றோம், அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது, அது எவ்வளவு தூரம் இந்த அரசாங்கத்தினாலும் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை காண்கின்றோம் என்றார்.
தமிழ் அரசியல் கைதிகள்
கடந்த 40 வருடங்களில் இந்தக் கொடிய சட்டமானது பல்வேறு தரப்புகளுக்கும் எதிராக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக யுத்த காலத்தில் ஏராளமான தமிழ் மக்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிக நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்றும் சுமார் 50 பேரளவில் தமிழ் அரசியல் கைதிகள் இச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மறுபுறம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தொடர்ந்து இச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராகத் திரும்பியது.
அன்றிலிருந்து இன்று வரை நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருடக் கணக்கில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள், சிவில் செயற்பாட்டாளர்கள், மத பிரசாரகர்கள், மாணவர்கள், பெண்கள் என பலரும் உள்ளடங்குகின்றனர்.
இந்த கைதி விவகாரத்தில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியில் போட்டியிடும் முஸ்லீம் வேட்பாளர்கள் பல்வேறு விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்பதுடன் குறித்த பல வேட்பாளர்கள் நீதியான தேவைப்பாடு மூலமாக இந்த கைதை பார்ப்பதாக கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன் கைதான இளைஞன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதியிடத்தில் வலியுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஒட்டு மொத்தமாக இந்த சட்டம் மீது சிறுபான்மை சமூகம் அதிகமாக வெறுத்துள்ளது எனவேதான் அப்பட்டமான பயங்கரவாத தடை சட்ட கைதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர் ஆசனத்தின் போது இருந்த கொள்கையில் மாற்றத்தை காண முயற்சிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் H. A. Roshan அவரால் எழுதப்பட்டு, 06 April, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.