அரச நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு
அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி அரச நிறுவனங்களில் திண்மக் கழிவு முகாமைத்துவ செயல்திறனை மேம்படுத்துவதற்கு நிலையான கழிவு முகாமைத்துவ முறைகளை பின்பற்றுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை
இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பல அரச நிறுவனங்கள் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளதால், அனைத்து அரச நிறுவனங்களிலும் உற்பத்தியாகும் கழிவுகளை தினசரி அடிப்படையில் முகாமைத்துவம் செய்யும் வகையில் இந்த வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் காகிதப் பாவனையை குறைக்க வேண்டும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என அமைச்சு மேலும் வலியுறுத்தியுள்ளது.
வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்
சம்பந்தப்பட்ட சுற்றறிக்கை கழிவு சேகரிப்பு மற்றும் அகற்றல் மற்றும் கழிவு மேலாண்மை நடைமுறைகளை கண்காணித்தல் பற்றிய வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளது.
மேலும், குறித்த சுற்றறிக்கை நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்குள் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் முறையான கழிவு மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |