தீர்ப்பு வரும் வரை, பதவியேற்க போவதில்லை என்று தம்மிக்க பெரேரா அறிவிப்பு!
உறுதி வழங்கிய தம்மிக்க
தனது நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் தொடர்பில் முடிவெடுக்கும் வரையில் நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது அமைச்சராகவோ சத்தியப்பிரமாணம் செய்யப்போவதில்லை என்று தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா உயர் நீதிமன்றில் உறுதியளித்துள்ளார்.
தமது நாடாளுமன்ற உறுப்பினர் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மனுக்கள் இன்று திங்கட்கிழமை, உயர்நீதிமன்றத்தில் அழைக்கப்பட்டபோதே அவர் இந்த உறுதியை வழங்கினார்.
நாளை மனுக்கள் பரிசீலனை
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஊடாக இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நாளை செவ்வாய்க்கிழமை (21) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
ஏற்கனவே தம்மிக்க பெரேரா, நாளைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரான பதவியேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.