தோட்ட தொழிலாளிகளுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை - ஜீவன் தொண்டமான் (VIDEO)
அக்கரபத்தனை பிளான்டேசனுக்குட்பட்ட தோட்டங்களில் வேலை செய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அக்கரபத்தனை பிளான்டேசனின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ கிராம் பறித்தாக வேண்டும் என்பது உட்பட தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.
அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
பெருந்தோட்ட மக்களை மிகவும் மோசமான நிலைக்கு அக்கரபத்தனை பிளான்டேசன் தள்ளிக்கொண்டிருக்கின்றது. சில தோட்டங்களில் 10 முதல் 12 கிலோ கிராம் கொழுந்து பறிப்பதே கடினமான செயல். இந்நிலையில் 20 கிலோ பறிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதனை நாம் ஏற்கவில்லை.
துரைமாரை இறக்கி கொழுந்து பறிக்க சொன்னோம், அவர்கள் எவ்வளவு பறிக்கின்றார்களோ அவர்களை விட அதிகமாக 2 கிலோ பறித்து தருவதாக குறிப்பிட்டோம். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. கொடுப்பனவுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எனவே, எமது போராட்டம் தொடரும்.
கடந்த ஒரு வருடமாக நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவில்லை. மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம். அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கின. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மேற்படி சந்திப்பில் பங்கேற்ற தோட்ட நிர்வாக தரப்புகளிடம் கருத்து கோர முயற்சித்த போதும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுவதை தவிர்த்துக் கொண்டனர்.







