ரணில் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம்: வாசுதேவ தடாலடி பதில்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அரசாங்கம் விடுத்துள்ள அழைப்பை நிராகரித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாளைய தினம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நேற்று எனக்கு தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நிதியமைச்சின் புதிய கட்டடத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. குழுக்கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு தொலைபேசி அழைப்பை எடுத்து பெண்ணொருவர் கூறினார்.
ஜனாதிபதிக்கு வாக்களித்தவர்கள் யார் என்பதை அறிய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்
நான் குழுக்கூட்டம் பற்றி விசாரித்த போது, அது ஆளும் கட்சி ஒழுங்கு செய்துள்ள குழுக்கூட்டம் என அவர் கூறினார். அந்த கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.
150 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் கலந்துக்கொள்வார்கள் என்று எண்ணி, அவர்கள் யார் என்பதை அறிந்துக்கொள்ளலாம் என்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்படலாம்.
தொலைபேசியில் பேசிய பெண் தகவல் வழங்குவர் மட்டுமே என்பதால், நான் அழைப்புக்கு பதிலளிக்கவில்லை.
எனினும் நாங்கள் எதிர்க்கட்சியில் இருப்பதால், நான் குழுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டேன் என்பதை நாட்டுக்கு கூறிக்கொள்கிறேன் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.