புத்தாண்டில் மக்கள் வறுமை நீங்கி வாழ அரசு வழி வகுக்குமா? இரா.துரைரெத்தினம் கேள்வி
புத்தாண்டில் எமது சமூகம் வளமுடன் வாழ்வதற்கு நாம் ஒவ்வொருவரும் எம்மிடமுள்ள வளங்களை பயன்படுத்தி உச்ச பயனை அடைவதற்கு பங்களிப்பு செய்ய வேண்டுமென முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓவ்வொரு குடும்பங்களும் பொருட்களின் விலையேற்றம் காரணமாகவும், தினக்கூலி வேலை செய்கின்றவர்கள், கடன்களைப் பெற்று குறிப்பிட்ட சம்பளத்தை பெறுகின்ற அரச உத்தியோகத்தர்கள், நடுத்தர வர்த்தகத் தொழிலில் ஈடுபடுகின்றவர்கள், யூரியா உரம் இன்றி விவசாயச் செய்கையில் பாதிக்கப்படும் விவசாயிகள், முறையற்ற மீன்பிடியால் பாதிக்கப்படும் மீனவர்கள், வீட்டுத் தேவைக்கென பொருட்களை அதிக விலைக்கு குத்தகை கடன் அடிப்படையில் பெற்று கடன் இறுக்க முடியாமல் பரிதவிக்கும் பல குடும்பங்கள், பொருட்களின் விலையேற்றத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், பொருட்களின் விலை அதிகரிப்பால் சம்பள உயர்வு கிடைக்காமல் வாழுகின்ற அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ஏற்கனவே வறுமையின் சுமையில் வாழுகின்ற பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், ஒன்றும் செய்ய முடியாமல் ஏற்கனவே வலுவிழந்துள்ள விசேட தேவையுடையோர்கள் இப்படி எமது சமூகத்தைச் சார்ந்த இன்னும் பல வறுமை கோட்டுக்குட்பட்டவர்கள் எவ்வாறு வாழ்வாதாரத்திற்காக புத்தாண்டில் வாழப் போகின்றார்கள்.
மாவட்டத்தில் உள்ள வளங்களான விவசாய உற்பத்திகள், தென்னை, பனை, மரமுந்திரிகைச்செய்கை, நீர் நிலைகளில் உற்பத்தி செய்யப்படும் மீன் வளங்கள், மண் வளங்களான - மணல், கிறவல், கருங்கல் பாறைகள், செங்கல், மட்பாண்ட உற்பத்திப் பொருட்கள், சிப்பி முருகை கற்களால் உற்பத்தி, இயற்கை வளச் சூழலான வனவளத்திலிருந்து பெறப்படும் பொருட்கள் விறகு, மரம், கால்நடைகள் மூலம் இருந்து வரும் வருமானங்கள், சிறுகைத்தொழில் மூலம் பெறப்படும் உற்பத்திப் பொருட்கள், குடிநீர், சேதனப்பசளை இது போன்ற இன்னும் பல வளங்களை மாவட்டத்தில் உருவாக்கினாலும் இப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்திற்காக மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவைமட்டுமன்றி குறிப்பாக, குத்தகை நிறுவனங்கள் மாவட்டத்திலுள்ள ஓவ்வொருவரையும் அவருடைய தேவைகளை ஒத்ததான கடன்களைச் சுமத்தி வட்டி வரி தினந்தோறும் செலுத்தக் கூடியவாறு ஒவ்வொரு நபர்களையும் கடன்காரர்களாக மாற்றி நடுத்தெருவில் நிறுத்தியுள்ளனர்.
இந்த நிலைகள் மாற்றமடைந்து எமது வளங்களை ஒவ்வொருவரும் பயன்படுத்தி தங்களது கால்களில் நிற்கக் கூடியவாறு அரசாங்கம் தயார் படுத்துமா? இந்த அரசு
அரசாங்கத்தை வழிநடத்த முடியாமல் பெற்ற கடன்களையும் மீளச் செலுத்த
முடியாமலும், அபிவிருத்திக்கென அதிக நிதி ஒதுக்கீட்டை ஒதுக்க முடியாமலும், அரச
உத்தியோகத்தர்களின், ஊழியர்களின் ஊதியத்ததை அதிகரிக்க முடியாமலும், நாட்டை விற்குமளவிற்கு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் மக்களின்
தேவைகளுக்காகவும், வறுமையை நீக்குவதற்காகவும் நல்லதொரு சூழலை உருவாக்குமா என தெரிவித்துள்ளார்.