திருகோணமலையில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பு
கந்தளாய் - அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதகம மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் தொல்லை அபாயகரமான அளவில் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இரவு வேளைகளில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழையும் காட்டு யானைகள், வீடுகளையும் பயிர்ச்செய்கைகளையும் சேதப்படுத்துவதால் தமது உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நேற்று இரவு மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த காட்டு யானை, அங்கு வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளை தின்றுவிட்டுச் சென்றுள்ளது.
யானையின் இந்த அத்துமீறலால், இடிந்து விழுந்த சுவரின் பாகங்கள் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது விழுந்ததில், மோட்டார் சைக்கிளின் முன்பக்கம் முற்றாக சேதமடைந்துள்ளது. மேலும், வீட்டுத் தளபாடங்களும் உடைந்து நொறுங்கியுள்ளன.
பொதுமக்களின் கோரிக்கை
இந்த சேதங்களை சரிசெய்ய ஐந்து முதல் ஆறு இலட்சம் ரூபாய் வரை செலவாகும் என வீட்டின் உரிமையாளர் கவலையுடன் தெரிவித்தார்.
"இரவு நேரங்களில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. எப்போது யானை வருமோ என்ற அச்சத்திலேயே ஒவ்வொரு இரவும் கழிகின்றது," என அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். "யானைகள் எங்கள் வாழ்வாதாரமான பயிர்களை அழித்து விடுகின்றன.
தென்னை, வாழை மற்றும் நெற்செய்கைகள் முற்றாக நாசமாக்கப்படுகின்றன. இதனால் நாங்கள் பெரும் நட்டத்தை சந்தித்து வருகிறோம்," எனவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
இப்பகுதியில் யானை வேலிகள் முறையாக அமைக்கப்படாததே இந்த தொடர்ச்சியான அத்துமீறல்களுக்கு முக்கிய காரணம் என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலமுறை இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தும் இதுவரை நிரந்தரத் தீர்வு எதுவும் எட்டப்படவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த தொடர்ச்சியான அச்சுறுத்தலால், இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியேறவே அஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எனவே, அரசாங்கமும் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களமும் உடனடியாக இதில் தலையிட்டு, தமது பகுதிக்கு நிரந்தர யானை வேலியை அமைத்துத் தருவதுடன், காட்டு யானைகளின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மெதகம பகுதி மக்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லையெனில், மனித-யானை மோதல் மேலும் தீவிரமடைந்து, உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.



