வீதி விபத்துக்களுக்கு காரணமாகும் காட்டு யானைகளின் செயற்பாடு: தடுக்க கோரும் நெடுந்தூரப் பயணிகள்
நெடுந்தூரப் பயணங்களில் மணலாற்றுப் பாதையினை பயன்படுத்தும் பயணிகள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் அவர்கள் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
வீதிகளில் உள்ள குறியீட்டுக் காட்டிகளை யானைகள் சேதமாக்கிப் போவதால் வளைவுகளைக் கொண்ட அந்த வீதிகளில் பயணிக்கும் போது விபத்துக்களை தவிர்ப்பது கடினமானதாக இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.
மணலாற்று பாதையினூடாக மணலாறு பிரதேச செயலகம், நெடுங்கேணி , வவுனியா திருகோணமலை,புல்மோட்டை, தென்னமரவடி என பல இடங்களுக்கு சென்று சேர முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மணலாறு என்பதனை மக்கள் தங்கள் பிரயோகப் பழக்கத்தில் வெலிஓயா என பயன்படுத்தி வருவதோடு முல்லைத்தீவு(Mullaitivu) கொக்கிளாய் வீதியில் உள்ள மணலாற்றுச் சந்தியை வெலிஓயா சந்தி எனவும் பயன்படுத்தி வருவதையும் குறிப்பிடலாம்.
மணலாற்று வீதி
முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் இருந்து பிரிந்து மணலாறு நோக்கி பயணிக்க உதவும் வீதியே மணலாற்று வீதி என அழைக்கப்படும். இந்த பாதையின் முதல் பத்துக் கிலோமீற்றர் தூரத்திற்கு பெருங்காட்டினூடாக இந்த வீதி செல்கின்றது.
மாலைப் பொழுது மற்றும் இரவுப் பொழுதில் வீதிக்கு வரும் யானைகள் வீதிகளில் உள்ள வீதிக் குறியீட்டு காட்டிகளை உடைத்து விடுதல் அல்லது வளைத்து விட்டுச் செல்லுதல் அண்மைக்காலமாக தொடர்ந்தவாறு இருப்பதாக அந்த வீதியினை அதிகம் பயன்படுத்தி வரும் பயணிகள் குறிப்பிடுகின்றனர்.
வளைவுகளை அதிகம் கொண்ட வீதியின் பகுதியாக முதல் பத்து கிலோமீற்றர் தூரம் இருப்பதால் பயணத்தின் வேகத்தினை மிகக்குறைந்தளவிலேயே பேண வேண்டி உள்ளதாக நெடுந்தூரப் பயணங்களில் ஈடுபட்டுவரும் பலரும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்த வீதியில் வளைவுகளும் பாரியளவிலான ஏற்ற இறக்கங்களும் திடீர் திருப்பங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னால் வளைவு, முன்னால் பாலம், வீதியின் ஏற்றம், இறக்கம் என்பன போன்ற குறியீடுகள் காட்சிப்படுத்தப்படும் போது அவற்றை அவதானித்து தம்மை தயார்படுத்தி வாகனத்தை கையாளலாம் என மணலாற்று வீதியைப் பயன்படுத்தும் வாகனச் சாரதிகள் தங்கள் அனுபவத்தினைக் குறிப்பிடுகின்றனர்.
அவை சேதமாக்கப்பட்டிருப்பதால் அவ்வாறு அவதானித்து வாகனங்களைச் செலுத்துவது கடினமான காரியமாகும் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
மஞ்சள் பின்னிற குறியீட்டுக்காட்டிகள்
வீதிச் சமிக்ஞை குறியீட்டு காட்டிகளில் பின்னிறம் மஞ்சள் கொண்ட காட்டிகளை யானைகள் அதிகளவில் சேதமாக்கியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
முல்லைத்தீவு கொக்கிளாய் பிரதான வீதியில் நீராவியடி பிள்ளையார் கோவிலுக்கு முன் யானைகள் வீதியைக் கடக்கும் போது அப்பகுதியில் உள்ள மஞ்சள் பின்னிறத்தினைக் கொண்ட வீதிக்காட்டிகளை சாய்த்து வளைத்து முறித்து விட்டுச் சென்றிருந்தன என்பதும் நோக்கத்தக்கது.
வீதியபிவிருத்தியின் போது நடப்பட்டிருந்த வீதிக்குறியீட்டு காட்டிகள் பழுதடைந்து செல்லும் போது அவற்றை மாற்றி புதியவற்றை நாட்டி வைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாது இருப்பதையும் அவதானிக்கலாம்.
ஆய்வுகள் தேவை
யானைகளால் சேதமாக்கப்படும் வீதி குறிகாட்டிகள் உடனுக்குடன் சரிசெய்யப்பட வேண்டும்.அப்படிச் செய்யும் போது அவை மீண்டும் யானைகளால் சேதமாக்கப்படும் போக்கு இருப்பதையும் கருத்தில் எடுத்துச் செயற்பட வேண்டும்.
வெள்ளைப் பின்னனி காட்டிகளும் மஞ்சள் பின்னனி காட்டிகளும் வீதிகளின் அமைவைக் காட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டு வருவதை அவதானிக்கலாம்.
என்னும் யானைகளால் அதிகளவில் மஞ்சள் பின்னனி கொண்ட வீதிக்குறியீட்டு காட்டிகள் வளைத்து உடைக்கப்பட்டிருப்பதனை மணலாற்று வீதியில் அவதானிக்க முடிகின்றது.
இதனடிப்படையில் இந்த தகவல் சார்ந்த தெளிவான ஆய்வொன்றின் முடிவின் அடிப்படையிலேயே சேதமான வீதிக் குறியீடுகளுக்குப் பதிலாக புதியனவற்றை நிலை நிறுத்த வேண்டும்.
அப்போது தான் அவை தொடர்ந்தும் யானைகளால் சேதமாவது தடுக்கப்படுப் படுவதோடு நீண்ட தொடர்ச்சியான பயன்பாட்டுக்கு உதவுபவையாக இருக்கும் என்பதும் இங்கே சுட்டிக் காட்டத்தக்கது.
விசமிகளின் செயலா
வீதிக் குறியீட்டு காட்டிகள் சேதமாகும் போதெல்லாம் விசமிகளின் செயலகத் தான் இருக்கும் என தாம் நினைத்ததாகவும் தொடர்ந்து அவதானித்ததன் மூலம் அது யானைகளால் சேதமாக்கப்படுவதாக அறிந்து கொண்டதாக எரிஞ்சகாடு விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வரும் சில விவசாயிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் மூலம் அறிய முடிந்ததும் இங்கே நோக்கத்தக்கது.
சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய முயலும் போது சுற்றுலாப்பயணிகள் இலகுவாக பயணங்களை மேற்கொண்டு இடங்களைச் சுற்றிப் பார்ப்பதற்கு பொருத்தமான பயண வழிகாட்டி குறியீடுகளை கொண்ட சிறந்த வீதிக் கட்டமைப்பை பேணுவது அவசியமானது என்பதும் நோக்கத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |