காட்டு யானை தாக்குதல் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்
காட்டுயானைகளின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான வேலிகளை அமைப்பதற்கான முன்னேற்பாட்டு கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் நேற்றையதினம் (09.04.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பொதுமக்களின் வாழ்விடங்களில் உட்பிரவேசித்து அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் காட்டுயானைகளின் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் இப்பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன.
கடந்த காலங்களில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், சில முரண்பாடுகள் காரணமாக இவ் வேலைத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
எனினும், இவ்வருடத்தில் குறித்த வேலைத்திட்டத்தை விரைவாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
மேலும், குறித்த ஒப்பந்தக்காரர்கள் உரிய வழிகாட்டுதல்களுக்கு அமைய பொருத்தமான இடங்களில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரால் கள ஆய்வு (field visit) மேற்கொள்ளப்படவுள்ளது. அத்தோடு இதன் நோக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்ட இடங்களை தொடர்ந்து சுத்தமாகவும் பராமரிக்கப்பட்ட நிலையிலும் வைத்திருக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்,பிரதம கணக்காளர் ,பிரதம பொறியியலாளர், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், உரிய பிரதேசங்களின் கிராம உத்தியோகத்தர்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள்,விடயத்தோடு தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






