இலங்கையில் நடைமுறைக்கு வந்துள்ள டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை - மில்லியன் கணக்கான பிளாஸ்டிக் அட்டைகள் ஒழிப்பு
இலங்கையில் இதுவரை காலமும் நடைமுறையில் இருந்த வாகனக் காப்புறுதி பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக அதிகாரப்பூர்வமாக முழுமையான டிஜிட்டல் மோட்டார் காப்புறுதி முறை நடைமுறைக்கு வந்துள்ளது.
அதன் பிரகாரம் இனிவரும் காலங்களில் காப்புறுதி நிறுவனங்களால் வழங்கப்படும் பாரம்பரிய பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக, டிஜிட்டல் முறையில் வாகனக் காப்புறுதியை உறுதிப்படுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை
புதிய நடைமுறை மே 1ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வந்துள்ளதாகவும், நாட்டில் இயங்கும் 14 காப்புறுதி நிறுவனங்களும் இப்போது பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக டிஜிட்டல் காப்புறுதி முறைக்கு மாறியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய செயல்முறையின் கீழ், காப்புறுதி திட்டமொன்றை பெற்றுக்கொள்ளும் வாகன உரிமையாளர்கள், டிஜிட்டல் காப்புறுதி முறையுடன் இணைக்கப்பட்ட மொபைல் செயலி, இணையத்தள இணைப்பு அல்லது QR குறியீட்டை பெறுவார்கள்.
பொலிஸாரின் வீதியோர சோதனைகளின் போது ஒரு வாகனத்திற்கு செல்லுபடியாகும் காப்புறுதித் திட்டம் உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்க உதவும் வகையில், பொலிஸாருக்கும் ஒரு பிரத்யேக டிஜிட்டல் சரிபார்ப்பு கருவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஆண்டுதோறும் சுமார் அறுபது லட்சம் பிளாஸ்டிக் காப்புறுதி அட்டைகள் வழங்கப்பட்டு, சுற்றுச்சூழல் கழிவுகளுக்கு வழிவகுத்திருந்தது.
'இந்த டிஜிட்டல் முறையின் மூலம், பிளாஸ்டிக் அட்டைகளின் பரவலான பயன்பாட்டை தடுத்து, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும்,' என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காப்புறுதி QR குறியீடுகள்
வாகன உரிமையாளர்கள் தங்கள் காப்புறுதி அட்டைகளை மொபைல் செயலிகள், இணைய சுட்டிகள், SMS இணைப்புகள் அல்லது தேவைப்பட்டால் அச்சிடப்பட்ட காப்புறுதி QR குறியீடுகள் மூலமாகவும் அணுகலாம்.
காப்புறுதியின் செல்லுபடியை நிகழ்நேரத்தில் சரிபார்க்க உதவும் வகையில், ஒரு தேசிய மோட்டார் காப்புறுதித் தரவுத்தளம் இப்போது நிறுவப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

'1338' என்ற ஹொட்லைன் தேசிய சரிபார்ப்பு ஹொட்லைனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
காப்புறுதி சரிபார்ப்பிற்காக அழைப்புகள்> SMS மற்றும் IVR தெரிவுகள் மூலம் சேவைகள் கிடைக்கின்றன.
இந்த டிஜிட்டல் அமைப்பு வீதியோர சோதனைகளின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்றும், ஒரு வாகனத்திற்கு செல்லுபடியாகும் காப்புறுதி ஆவணங்கள் உள்ளதா என்பதை பொலிஸார் விரைவாகத் தீர்மானிக்க இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சரிபார்ப்பை மேற்கொள்ளும் மூன்று வழிகள்
• *1338# என்ற USSD குறியீடு
• வாகனம் அல்லது காப்புறுதி எண்ணை 1338 என்ற எண்ணுக்கு SMS மூலம் அனுப்புதல்
• நேரடி உதவிக்கு 1338 என்ற ஹொட்லைனை அழைத்தல்