துபாயில் மறைந்திருந்த பாதாள உலக சூத்திரதாரி கைது..! விரைவில் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை
துபாயில் தலைமறைவாக பதுங்கிக் கொண்டு இலங்கையில் குற்றச் செயல்களை மேற்கொண்டு வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர்களில் ஒருவரான அல்டோ தர்மே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை துபாயில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
“அல்டோ தர்மே” என்றழைக்கப்படும் எல்லாவல லியனகே தர்மசிறி பெரேரா என்ற நபர், துபாயிலிருந்து இலங்கையில் பல்வேறு கொலைகளையும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களையும் அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயின் இரவு விடுதியொன்றில் கடந்த 23ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட ஒரு விசேடநடவடிக்கையில், அல்டோ தர்மே, அவரது மனைவி மற்றும் அவருக்கு மிகவும் நெருக்கமான மூன்று நண்பர்கள் ஐக்கிய அரபு அமீரக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரினால் தேடப்பட்ட நிலையில், இலங்கையில் இருந்து தப்பிச் சென்று, நீண்ட காலமாக வெளிநாட்டில் பதுங்கியிருந்த இந்தக் குற்றவாளியைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தலும் (Red Notice) வெளியிடப்பட்டிருந்தது.
ரஞ்சன் டி சில்வா கொலை விவகாரம்
தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையின் பொதுஜன எக்சத் பெரமுனவின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைவருமான தனஞ்சய டி சில்வாவின் தந்தை ரஞ்சன் டி சில்வா சுட்டுக் கொல்லப்பட்டதன் முக்கிய சூத்திரதாரி என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு ரத்மலானையில் உள்ள அவரது வீட்டின் முன்பாக ரஞ்சன் டி சில்வா கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நேரத்தில், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திய விசாரணைக் குழுக்கள், அல்டோ தர்மே என்ற இந்த பாதாள உலகத் தலைவரால் துபாயிலிருந்து இந்தக் கொலை முழுமையாகத் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டது என்று தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், வெளிநாட்டில் இருந்துகொண்டு இந்த நாட்டில் குற்றச் செயல்களை அரங்கேற்றி வந்த தர்மாவும் அவரது குழுவினரும், துபாயின் சொகுசு விடுதியொன்றில் விருந்துபசாரமொன்றை நடத்தியபோது அந்நாட்டின் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
கடும் நஷ்டத்தை நோக்கி ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam
அவுஸ்திரேலியாவை விட்டு சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த தொழிலதிபர்: அவர் வைத்த குற்றச்சாட்டு News Lankasri