குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வைத்து தீர்ப்பு வழங்க கூடாது: விக்னேஸ்வரன் எதிர்ப்பு
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொலிஸாரால் வழங்கப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை ஏற்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களை மெய்நிகர் வழியாக ஆளுநர் செயலகத்தில் சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச் சட்டம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,“பயங்கரவாத தடைச் சட்டம் அரசியல் கைதிகள் விடயத்தில் பாதகமான ஒரு சட்டமாக காணப்படுகின்ற நிலையில் அதனை நீக்க வேண்டும் என்பது அனேகமானவர்களின் நிலைப்பாடு.
பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்படுபவரை பொலிஸாரால் நீதிமன்றத்திற்கு வழங்கப்படுகின்ற குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புகள் வழங்கப்படுகிறது.
எனது தீர்ப்பு

நான் நீதியரசர் ஆக இருந்தபோது குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை ஏற்க முடியாது என தீர்ப்பு வழங்கினேன்.
ஒருவர் தான் செய்தது குற்றம் என குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கினாலும் அக் குற்றத்தை அவர் செய்தாரா என்பது தொடர்பில் நீதிமன்றம் ஆராயும் கடப்பாடு உள்ளது.
பயங்கரவாத தடை சட்டத்தின் ஏற்பாடுகள் அதன் கீழ் கைது செய்யப்படுபவரை நீண்ட காலமாக தொடர்ச்சியாக தடுத்து வைத்து விசாரிப்பதற்கு இடமளிக்கிறது.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம்
சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனேகமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் வழக்குகள் நிறைவுறும் சந்தர்ப்பங்களில் புதிய குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்து அவர்களை தொடர்ந்து தடுத்து வைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறியப்படுகிறது.
ஆகவே பயங்கரவாத தடை சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்படுவதற்கு சட்ட ஏற்பாடுகள் இருப்பினும் அதனை வியாக்கியானம் செய்ய நீதிபதிகளுக்கு உரித்து உள்ளது.”என தெரிவித்துள்ளார்.
| தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை(Video) |