பாகிஸ்தானில் என்ன நடக்கிறது: இம்ரான் கான் ஏன் கைது செய்யப்பட்டார்..!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே பாதுகாப்புப் படையினரால் நேற்றைய தினம் (09.2023) கைது செய்யப்பட்டார்.
இம்ரான் கான் கைது தொடர்பாக இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நகர பொலிஸார் தலைவர் அக்பர் நாசிர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, ஊழல் வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என்ற ஊகம் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்த வழக்கின் பின்னணியில் உள்ள காரணங்களைப் புரிந்துகொள்ள பி.பி.சி. இந்தி செய்தியாளர் பிரேர்ணா, பிபிசி உருது சேவையின் ஆசிரியர் ஆசிஃப் ஃபரூக்கியிடம் உரையாடினார். அந்த உரையாடலிலிருந்து இக்கட்டுரை தொகுக்கப்பட்டிருக்கிறது.
இம்ரான் கான் எதற்காகக் கைது செய்யப்பட்டார்?
கேள்வி - இம்ரான் கான் கைது தொடர்பான பேச்சு நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், அவர் ஏன் திடீரென கைது செய்யப்பட்டார்?
பதில் - இது திடீரென நடந்ததல்ல. பின்னணியில் நடவடிக்கை நடந்து கொண்டுதான் இருந்தது. பாகிஸ்தானில் ஊழலைத்தடுக்கும் பொறுப்பு உள்ள நிறுவனம் தேசிய பொறுப்புடைமை பணியகம் (NAB). அந்நிறுவனம் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு மனு அனுப்பியிருந்தது. அவரை நேரில் முன்னிலையாகுமாறும், சில கேள்விகளுக்குப் பதில் அளிக்குமாறும் கேட்டிருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காததால் படிப்படியாக விஷயம் கைது வரை சென்றது.
இந்த விவகாரம் இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் நிகழ்ந்தது. அப்போது அவர் ஆன்மீகம் மற்றும் சூஃபித்துவத்தில் பணியாற்றுவதற்காகப் பாகிஸ்தானிலிருக்கும் பஞ்சாப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவ அனுமதி அளித்தார்.
அந்தப் பல்கலைக்கழகத்தைக் கட்ட பஞ்சாப் அரசு நிலங்களை வாங்கியது. அந்த நிலத்தை வாங்குவதில் இம்ரான் கானும் அவரது மனைவியும் மோசடி செய்ததாகத் தேசிய பொறுப்புடைமை பணியகம் கூறுகிறது. சட்டவிரோதமாக நிலம் வாங்கப்பட்டதால் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன் இம்ரான் கான் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
இம்ரான் கானுக்கு பிணை கிடைக்குமா?
கேள்வி - தேசிய பொறுப்புடைமை பணியகத்தின் கட்டுப்பாடு யார் கைகளில் உள்ளது மற்றும் அது எவ்வாறு செயல்படுகிறது?
பதில் - தேசிய பொறுப்புடைமை பணியகம் சில ஆண்டுகளாகச் சர்ச்சைக்குரிய அமைப்பாக மாறியுள்ளது.
இது பர்வேஸ் முஷாரஃப் பதவிக்காலத்தில் உருவாக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர்களின் வாயை அடைக்க அவர் இந்த அமைப்பைப் பயன்படுத்தினார்.
இந்த அமைப்பிடம் நிறைய அதிகாரங்கள் இருந்தன. தேசிய பொறுப்புடைமை பணியகம் ஒருவரை கைது செய்த பின்னர் அவரை 60 நாட்களுக்கு தன் காவலில் வைத்திருக்க முடியும்.
இம்ரான் கான் ஆட்சியின் போது பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர்களும் இதன் காவலில் இருந்துள்ளனர். இதில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் மரியம் நவாஸ் ஆகியோரும் அடங்குவர்.
இந்த முறை என்ன நடக்கும்
ஆனால், இம்ரான் கானின் அரசு வெளியேறிய பிறகு, இந்த அமைப்பிற்குப் பரந்த அதிகாரங்கள் இருப்பதாகவும், அதன் உதவியுடன், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கருதிய புதிய அரசு, அதன் அதிகாரங்களைக் குறைத்துள்ளது.
இன்றைய தேசிய பொறுப்புடைமை பணியகம் ஒரு வருடத்திற்கு முன்பிருந்ததை விட மிகக் குறைவான அதிகாரங்களோடு செயல்படுகிறது. எல்லா அரசுகளும் தங்கள் அரசியல் திட்டங்களை நிறைவேற்ற இந்த அமைப்பைப் பயன்படுத்தியுள்ளன.
கேள்வி - இம்ரான் கானுக்கு என்னென்ன சட்ட வழிகள் உள்ளன. இதற்கு முன்பும் பலமுறை அவர் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற்றுள்ளார். இந்த முறை என்ன நடக்கும்?
பதில் - இது சட்ட விடயத்தைக்காட்டிலும் அரசியல் ரீதியான விடயமாகும். சட்டரீதியாக, அவர் தொடர்ந்து நிவாரணம் பெறுகிறார். ஆனால், பின்னர் புதிய வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.
நான் கூறியது போல், தேசிய பொறுப்புடைமை பணியகத்தின் சட்டங்கள் கடந்த ஆண்டு இருந்தைப்போல இப்போது வலுவாக இல்லை.
முன்பெல்லாம் பிணை கிடைப்பதே சிரமம். சிலருக்கு இரண்டு ஆண்டுகள் கூட பிணை கிடைக்காமல் இருந்துள்ளது.
ஆனால், ஒப்பீட்டளவில் இப்போது இம்ரான் கானுக்கு பிணை கிடைப்பது எளிது.
ஆனால், பாகிஸ்தானில் அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் வழக்குகளைச் சட்ட அடிப்படையில் மட்டும் அல்லாமல் அரசியல் பின்னணியிலும் பார்க்க வேண்டும்.
இதற்குப் பிறகுதான் விடயம் எங்கு முடியும் என்பதை நீங்கள் யூகிக்க முடியும். இம்ரான் கான் விடயத்தில் கூட, சட்ட விவாதம் அவ்வளவு முக்கியமில்லை. உண்மையில் அரசியல் சூழ்நிலை முழு விடயத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இம்ரான் கானை நீதிமன்றம் ஆதரிக்கிறதா?
கேள்வி - பாகிஸ்தானில் அவரது சொந்தக் கட்சியைத் தவிர இம்ரானுடன் யார் இருக்கிறார்கள்? அவருக்கு எதிராக யார் உள்ளனர்?உதாரணமாக, இராணுவம், நீதித்துறை மற்றும் பிற அரசியல் குழுக்களின் நிலைப்பாடு என்ன?
பதில் - இம்ரான் கான் ஆட்சியில் இருந்து வெளியேறியதில் இருந்து அவருக்கு நீதிமன்றத்தின் ஆதரவு அதிகமாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.
நீதிமன்றத்தில் விசாரணை நடத்தும் நீதிபதி கூட தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் ஆதரவாளர் என்றும் இம்ரான் கானுக்கு ஆதரவாகத் தீர்ப்புகளை வழங்குவதாகவும், இம்ரான் கானின் அரசியல் எதிரிகள் கூறத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முன்பும் இம்ரானை கைது செய்யப் பல முயற்சிகள் நடந்தன. ஆனால், நீதிமன்றத்தின் மூலம் அவருக்கு முன்னெப்போதும் இருந்திராத அளவிற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலையாகும் வரை அவரது கைது வாரண்டை நீதிமன்றங்கள் நிறுத்தி வைத்துள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலையான போதெல்லாம் அவருக்கு பிணை கிடைத்துள்ளது.
இனி அரசியல் விவகாரங்களில் தலையிடுவதைக் குறைத்துக்கொள்ளப் போவதாகப் பாகிஸ்தான் இராணுவம் ஓராண்டுக்கு முன்பு வரை கூறி வந்தது.
கடந்த ஒன்றரை வருடங்களில் இராணுவம் அரசியலில் இருந்து தன்னை வெகுவாக ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், பாகிஸ்தானின் அதிகார வட்டங்களில் இதனால் ஏற்பட்ட வெற்றிடம் நீதிமன்றங்களால் நிரப்பப்பட்டுள்ளது.
நீதிமன்றம் இம்ரான் கானுக்கு நிறைய நிவாரணம் கொடுப்பதால் மக்கள் முன் இம்ரான் தன்னை நிலைநிறுத்திக் கொள்வது போல் தெரிகிறது. இராணுவத்தில் தனக்கு ஆதரவானவர்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தின் ஆதரவு தனக்குக் கிடைத்து வருவதாகவும் அவர் கூறுகிறார்.
இம்ரான் கான் பாகிஸ்தானின் சாதாரண அரசியல்வாதிகளைப் போல் இல்லை. அவர் ஒரு அசாதாரண சக்தியைப் பெற்றுள்ளார், அதை அவர் நன்றாகப் பயன்படுத்துகிறார்.
இம்ரான் கானின் அரசியல் செல்வாக்கு
கேள்வி - இந்தக் கைது நடவடிக்கையின் அரசியல் விளைவு என்னவாக இருக்கும்? அரசுக்கும் இம்ரானுக்கும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும். பாகிஸ்தானில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தற்போதைய நிலவரத்தைப் பார்க்கும் போது, தேர்தல் நடக்குமா? உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று இம்ரான் கான் நீண்ட நாட்களாகக் கோரி வருகிறாரே?
பதில் - இந்தக் கைதின் விளைவு என்னவாக இருக்கும் என்பது அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பொறுத்தது.
ஒரு மாதத்திற்குள் பிணையில் வெளியே வந்தால் அது அவரது அரசியலை மேலும் வலுவாக்கும்.
ஆனால், தேர்தல் முடியும் வரை அவர் சிறையில் இருந்தால் அது தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சிக்குத் தோல்வியைக் கொடுக்கக்கூடும்.
தெஹ்ரீக்-இ-இன்சாப் பாகிஸ்தானின் மற்ற கட்சிகளைப் போலல்லாமல் ஒரு தனிநபர் கட்சி.
இம்ரான் கான் வீதிக்கு வரும்போது மக்களும் வெளியே வருகிறார்கள். அவர் தேர்தல் பிரசாரத்திற்குச் செல்லவில்லை என்றால், அது பிடிஐ கட்சிக்கு மிகவும் கடினமான நேரமாக அமையும்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன - முதலில், வேட்பாளர்களுக்கு டிக்கெட் கொடுக்கும் போது கட்சி நிறையச் சிக்கல்களைச் சந்திக்கும். இரண்டாவதாக, இம்ரான்கான் மக்கள் மத்தியில் இல்லையென்றால் கட்சி பின்னடைவைச் சந்திக்க நேரிடலாம்.
பங்குச் சந்தையில் தாக்கம்
இம்ரானின் கைது பாகிஸ்தானின் பங்குச் சந்தை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
செவ்வாயன்று பங்குச் சந்தை குறியீடு 400 புள்ளிகளுக்கு மேலான சரிவுடன் முடிந்தது.
நாட்டின் அரசியல்-பொருளாதார சூழ்நிலையால் பங்குச்சந்தை ஏற்கனவே அழுத்தத்தில் இருந்ததாகவும், தற்போது இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால் அது மேலும் சரிந்துள்ளதாகவும் பங்குச்சந்தை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தையில் கொந்தளிப்பு நிலவியது. ஒரு மணி நேரத்திற்குள் பங்குகளை விற்கும் அலைமோதல் தொடங்கியது.
இம்ரான் கானின் கைது நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை அதிகரித்து, பங்குச் சந்தையில் மோசமான விளைவை ஏற்படுத்தும் எனப் பங்குச் சந்தை தரகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.