விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான் ஏன் தப்பித்து ஓட வேண்டும்! மகிந்த ஆவேசம்
"நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கின்றேன். நாட்டை விட்டு ஓடும் எண்ணம் எனக்குக் கிடையாது. விடுதலை புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்த நான், ஏன் நாட்டைவிட்டு ஓட வேண்டும் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் சிலருடன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்றுமுன்தினம் உரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,"அதியுயர் பதவிகளில் இருந்து ராஜபக்சக்கள் விரட்டியடிக்கப்படும் போராட்டத்துக்குத் திட்டம் தீட்டிய உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகளை எனக்கு தெரியும்.
எனினும், நான் அமைதியாகவே இருக்கின்றேன். உண்மைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும். காலம் ஒரு நாள் பதில் சொல்லியே தீரும்.
ராஜபக்சக்கள் உள்ளடங்கிய பெரமுன கட்சி மக்கள் ஆணையை இழந்துவிட்டது என்று எதிர்த்தரப்பினர் உளறுகின்றனர். இது வேடிக்கையாக இருக்கின்றது.
புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்பவர்கள் இந்த நெருக்கடியான நிலைமையில் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். அமைச்சர்கள் அனைவருக்கும் எனது ஒத்துழைப்பை வழங்குவேன்" என கூறியுள்ளார்.
ராஜபக்சக்களை அரசியலில் இருந்து அகற்ற முடியாது! வெளியான எச்சரிக்கை- செய்திகளின் தொகுப்பு |