இறுதிப்போர் குறித்த இரகசிய விபரங்கள்! புலனாய்வு தகவல்களை அம்பலப்படுத்த சலேயிடம் கேட்கப்படும் கடவுச்சொல்
தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேயின் கணினியில் காணப்படும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பாக இந்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அவர் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் சுரேஷ் சலேக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதையோ அல்லது அது குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதையோ தான் எதிர்க்கவில்லை எனவும், அது குறித்து தான் வருத்தம் தெரிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்கியமான புலனாய்வுத்தகவல்கள்
இறுதிக்கட்டப் போரின் போது தேசிய புலனாய்வுப் பிரிவின் பிரதானியாகக் கடமையாற்றிய சுரேஷ் சலேயின் வசம், நாட்டின் பாதுகாப்பு சார்ந்த மிக முக்கியமான புலனாய்வுத் தகவல்கள் இருக்கக்கூடும் என தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனை இலக்கு வைத்து கொலை செய்வதற்கான உளவுத் தகவல்கள் சலேயின் கணினியின் ஊடாகவே கிடைக்கப்பெற்றதாக தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் இராணுவத்தின் ஆள ஊடுருவித் தாக்கும் படையினரின் பல முக்கிய நடவடிக்கைகள் இந்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டன.
தற்போது சலேயிடம் அவரது கணினியின் கடவுச்சொற்களைக் கேட்டு, இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் நடப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதிப்போர் குறித்த இரகசிய விபரங்கள்
இந்த தகவல்கள் சலேயின் தனிப்பட்ட சொத்தோ அல்லது தனிப்பட்ட விபரங்களோ அல்ல; அவை நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புடன் தொடர்புடைய புலனாய்வுத் தகவல்கள் என தயாசிறி ஜயசேகர வாதாடியுள்ளார்.
இந்தத் தகவல்களைத் தேவையற்ற முறையில் அம்பலப்படுத்துவது என்பது, இலங்கையின் இறுதிப் போர் குறித்த இரகசிய விபரங்களை முழு உலகிற்கும் பகிரங்கப்படுத்துவதற்கு நிகரானது என்றும், இதனால் அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் நிதானமாகச் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.