அடுத்த பாப்பரசர் யார்..! வத்திக்கானில் முடக்கப்பட்டுள்ள தொலைபேசி வலையமைப்புக்கள்
அடுத்த பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான இரகசிய மாநாட்டிற்கு முன்னதாக, நாளை(7) புதன்கிழமை வத்திக்கானில்(vatican) அனைத்து தொலைபேசி வலையமைப்புக்களும் செயலிழக்கச் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற பாப்பரசர பிரான்சிஸ்க்குப் பின்னர், யார் பாப்பரசராக தெரிவாவார் என்பதைத் தீர்மானிக்க 133 கர்தினால்கள் வாக்களிக்கவுள்ளனர்.
புதிய பாப்பரசர்
இந்தநிலையில், குறித்த நிகழ்வு இடம்பெறும் மண்டபத்துக்கு வெளியே மின்னணு கண்காணிப்பு அல்லது தகவல் தொடர்புகளை நிறுத்த, வலையமைப்பு தடுப்புக்கருவிகளை பயன்படுத்தவும் வத்திக்கான் திட்டமிட்டுள்ளது.
புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்காக, கர்தினால்கள் சிஸ்டைன் சேப்பல் மண்டபத்துக்கு செல்ல திட்டமிடப்பட்டு, ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர், பிற்பகல் 3 மணி முதல் தொலைபேசி வலையமைப்புக்கள் செயலிழக்கப்படும் என்று வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், அடுத்த பாப்பரசரை தீர்மானிக்க வாக்களிக்கும் 133 கர்தினால்களும் ரோமை அடைந்துவிட்டதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் லத்தீன் மொழியில் "சாவியுடன்"(withkey) என்று பொருள்படும் "கொன்க்ளேவ்" என்று அழைக்கப்படும் மிகவும் இரகசியமான கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் இது ஒரு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படும் வரை கர்தினால்கள் எவ்வாறு பூட்டப்படுவார்கள் என்பதற்கான ஒரு ஒப்புதலாகும்.
தெரிவு செய்யும் மாநாடு
இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமையன்று, கர்தினால்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகள்; மற்றும் மின்னணு சாதனங்களை கைவிட வேண்டும் என்றும் புதிய பாப்பரசரை தெரிவு செய்யும் மாநாடு முடிந்ததும் அவர்களுக்கு தங்கள் சாதனங்கள் திரும்ப வழங்கப்படும் என்று வத்திக்கான் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி கர்தினால்கள் சிஸ்டைன் சேப்பலில் புதன்கிழமையன்று வெளி உலகத் தொடர்புகளில் இருந்து முழுமையாக துண்டிக்கப்படுவார்கள்.
மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து கர்தினால்களும் முழுமையான தனிமையில் இருப்பார்கள், அத்துடன் முழுமையான மற்றும் நிரந்தர இரகசியத்தை கடைப்பிடிக்க சபதம் எடுப்பார்கள்.
இதேவேளை இந்த முக்கிய நிகழ்வை முன்னிட்டு, செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகள் மற்றும் பொது இடத்தில் உலோகக் கண்டுபிடிப்பான்கள் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.