தடுப்பூசி எவ்வாறு வேலை செய்கிறது - யாரெல்லாம் போடக்கூடாது - முழுமையான விளக்கத்தோடு வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன்
ஒரு வருடமாக பாரியளவில் ஆராயப்பட்டே தற்போது தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை தயாரித்து விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு போட்டு பரிசோதனை செய்தே இதனை உறுதிப்படுத்திருக்கிறார்கள். எல்லா நாடுகளும் மூன்று நிலைகளில் இது தொடர்பான பரிசோதனைகள் செய்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றன.
அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர குறித்த நாடுகளின் சுகாதார நிறுவனங்கள் இதற்கான அனுமதியை கொடுத்திருக்கின்றன. அந்த அனுமதி கொடுத்த பின்னரே நாம் அவற்றை பயன்படுத்துகிறோம். பல கட்டங்கள் பல பரிசோதனைகளை தாண்டி நிரூபிக்கப்பட்ட பின்னரே இந்த தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
எனவே மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசியை எடுக்கவேண்டும் என்று வட மாகாண சமுதாய வைத்திய நிபுணர் டாக்டர் கேசவன் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கும் செயற்பாடு குறித்து கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
கேள்வி: கொரோனா வைரஸ் தொடர்பாக தற்போது பேசப்பட்டு வருகின்ற தடுப்பூசிகள் தொடர்பில் மக்களுக்கு விளக்கம் அளிக்க முடியுமா ?
பதில்: கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் விடயத்தில் பல்வேறு நாடுகள் தற்போது பல்வேறு தடுப்பூசிகளை கண்டுபிடித்திருக்கின்றன. இந்த தடுப்பூசிகளில் இருக்கின்ற பதார்த்தம் என்னவென்று நாம் பார்ப்போமானால் கொரோனா வைரஸின் பகுதிகள் அல்லது குற்றுயிராக்கப்பட்ட இந்த வைரஸின் பகுதிகள் உடம்பை தாக்காத வகையில் உடம்புக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை பெற்றுக் கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றது. உடம்புக்குள் இந்த தடுப்பூசி சென்றவுடன் எதிர்ப்பு சக்திகள் உருவாக ஆரம்பித்துவிடும். இதில் இரண்டு முறை ஒரே தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு தடவைகள் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட பின்னரே முழுமையாக ஒருவருக்கு அந்த நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி கொரோனாவிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சக்தி உருவாகும்.
கேள்வி : உலகில் எந்தெந்த நாடுகளில் எவ்வாறான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன?
பதில்: அமெரிக்காவில் இரண்டு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பைசர் மற்றும் மொடோனா என இரண்டு தடுப்பூசிகள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை அவசரத் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று உலக சுகாதார ஸ்தாபனமும் அறிவித்திருக்கிறது. அந்த தடுப்பூசிகள் மிகமிக சக்தி வாய்ந்தவை. மேலும் அவை சிறந்ததோர் எதிர்ப்பு சக்தியை உருவாக்க கூடியதாக இருக்கின்றன. அத்துடன் பிரிட்டன் இந்தியா சீனா ரஷ்யா ஆகிய நாடுகளிலும் தற்போது தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் பாவனைக்கும் தற்போது வந்துவிட்டன. ஆனால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளானது -70 தொடக்கம் -80 வரையான டிக்ரி காலநிலையில் வைத்துக்கொள்ள வேண்டியவைகளாக காணப்படுகின்றன.
எனவே, அந்த தடுப்பூசிகள் இலங்கைக்கு வருமிடத்தில் மிகவும் கவனமாக அவற்றை பாதுகாத்து பயன்படுத்த வேண்டும். அதேவேளை ஏனைய நாடுகளில் உருவாக்கப்படும் தடுப்பூசிகள் 2 தொடக்கம் 8 டிகிரி காலநிலையில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவே காணப்படுகின்றன. இவை பொதுவாக இதுவரை காலமும் நாங்கள் பாவிக்கின்ற தடுப்பூசிகளை போன்ற ஒரு தன்மையைக் கொண்டுள்ளன.
நாம் ஏற்கனவே பல தடுப்பூசிகளை பெற்றிருக்கின்றோம். எனவே இந்த தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது இலகுவாக இருக்கும். காரணம் அதற்கான பொறிமுறைகளை எம்மால் இலகுவாக உருவாக்க முடியும். விசேட பொறிமுறைகள் இதற்கு தேவையில்லை. இந்தியா சீனா ரஷ்யா ஆகிய நாடுகளின் தடுப்பூசி வகைகளைப் பயன்படுத்துவது எமக்கு இலகுவாக இருக்கும். இப்பொழுது எங்களுக்கு உடனடியாக கிடைக்கக் கூடியதாக இருப்பது இந்தியாவின் கொவிசீல் எனப்படும் தடுப்பூசியாகும். இது பாதுகாப்பான நோய் எதிர்ப்பு சக்தியை சிறந்த முறையில் உருவாக்க கூடியதுமான ஒரு தடுப்பூசியாகும். இதில் பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை. இதனைத்தான் நாங்கள் இலங்கையில் முதலாவதாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
கேள்வி : இலங்கைக்கு இன்று இந்தியாவிலிருந்து 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்க ஏற்பாடாகியுள்ளது. அது மட்டுமா அல்லது ஏனைய நாடுகளிலிருந்தும் எமக்கு தடுப்பூசிகள் கிடைக்குமா?
பதில் : இந்தியாவிலிருந்து எமக்கு முதலாவதாக ஆறு இலட்சம் தடுப்பூசிகள் வருகின்றன. அதனைவிட மேலும் இந்தியாவிலிருந்து எமக்கு தடுப்பூசிகள் கிடைப்பதற்கு ஏற்பாடாகியிருக்கின்றது. முதல் கட்டமாக தற்போது 6 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கின்றன. தொடர்ந்து இந்தியாவிலிருந்து மேலும் கிடைக்கும். இதனைவிட உலக சுகாதார ஸ்தாபனமும் எமக்கு ஒரு குறிப்பிட்டளவு தடுப்பூசிகளை வழங்கும். எமது நாட்டுக்கென்று ஒரு கோட்டா காணப்படுகின்றது. அதற்கேற்ற வகையில் அந்த தடுப்பூசிகள் கிடைக்கும்.
கேள்வி :அந்த தடுப்பூசிகளை உலக சுகாதார ஸ்தாபனம் எங்கிருந்து எமக்கு பெற்றுக்கொடுக்கும்?
பதில் :அது நிச்சயமாக தெரியாது. ஆனால் பொதுவாக ஸ்பைசர் தடுப்பூசியாக இருக்கக் கூடிய சாத்தியம் இருக்கின்றது. இந்திய தடுப்பூசியை தவிர சீனா ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் தடுப்பூசியை பெற்றுக் கொள்வது தொடர்பாக பேச்சுவார்த்தை ஜனாதிபதி நடத்தியிருக்கின்றார். எனவே அந்த நாடுகளில் இருந்தும் எங்களுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதற்தற்கான சந்தர்ப்பங்கள் உள்ளன. வெகுவிரைவில் மிக அதிகமான தடுப்பூசிகள் எமது நாட்டை வந்தடையும் என்று நாங்கள் நம்புகிறோம். அப்போது நாங்கள் எதிர்பார்க்கின்ற சனத்தொகைக்கு இந்த தடுப்பூசிகளை பாவிக்கக் கூடியநிலை வெகு விரைவில் ஏற்படும் என்று நம்புகிறோம்.
கேள்வி: இந்தியாவில் இருந்து தற்போது தடுப்பூசிகள் வரவுள்ள நிலையில் மேலும் சில நாடுகளில் இருந்தும் தடுப்பூசிகள் கிடைக்குமென்ற நம்பிக்கை உள்ளதா?
பதில் : நிச்சயமாக கிடைக்கும். அத்துடன் இந்தியாவிலிருந்து மேலும் தடுப்பூசிகள் கிடைக்கும்.
கேள்வி : இந்தியா எந்த தரப்புடன் இணைந்து இந்த தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது?
பதில் : இந்தியா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் இது ஒரு பெரிய வெற்றி என்றே கூற வேண்டும். காரணம் அந்த தடுப்பூசி வெற்றிகரமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா அந்த தடுப்பூசிகளை ஏனைய நாடுகளுக்கு விநியோகிப்பதற்கும் ஆரம்பித்திருக்கிறது. உலகத்திலேயே ஒரு மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது.
கேள்வி: இந்தியாவில் தற்போது இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டதா?
பதில்: ஆம். இந்தியாவில் தற்போது இந்த கொவிசீல் என்ற தடுப்பூசி பாவனைக்கு வந்திருக்கிறது. வெற்றிகரமாக தமிழ்நாட்டிலும் பயன்படுத்தப்படுகின்றது.
கேள்வி: தற்போது இலங்கைக்கு இந்த தடுப்பூசிகள் வந்தவுடன் இலங்கையில் முதல்கட்டமாக யாருக்கு எந்த முறைமையின் அடிப்படையில் எவ்வாறான பொறிமுறையில் தடுப்பூசிகள் போடப்பட உள்ளன என்பதை கூற முடியுமா?
பதில்: இது தொடர்பில் சுகாதார துறையானது ஒரு திட்டத்தையும் பொறிமுறையையும் தயாரித்திருக்கிறது. முதலாவதாக சுகாதாரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். காரணம் அவர்களுக்குதான் தற்போது ஆபத்து அதிகமாக இருக்கின்றது. அடுத்ததாக முப்படை மற்றும் பொலிசாருக்கு இந்த தடுப்பூசிகளை போடுவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதன் பின்னர் அடுத்த கட்டமாக நாங்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க ஆரம்பிப்போம். முதலாவதாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். அதன்பின்னர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதன் பின்னர் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதனைவிட முக்கியமாக வேறு நோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான திட்டமிடல்கள் தற்போது இடம்பெறுகின்றன.
கேள்வி: இதற்கான பொறிமுறையை தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதா?
பதில்: வெற்றிகரமான பொறிமுறையை உருவாக்கியிருக்கின்றோம். அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் அலுவலகம், பிரதேச சபைகள் என சகலரும் இணைந்து தேர்தல் ஆணைக்குழுவின் பட்டியலையும் எடுத்து இந்த பொறிமுறையை உருவாக்கியுள்ளோம். அனைத்து மக்களும் இதில் உள்ளடங்கும் வகையில் இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகலரையும் அழைத்து தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி: தடுப்பூசி ஏற்றப்படும் பொறிமுறை குறித்து விளக்க முடியுமா? பதில்: அதாவது தடுப்பூசி போடப்பட வேண்டியவர்கள் தொடர்பாக நாங்கள் சில தினங்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிப்போம். முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணி அவர்கள் நாங்கள் அறிவிக்கும் இடத்திற்கு வரவேண்டும். முதலாவதாக அவ்வாறு வருகிறவர்களிடம் அங்கு இருக்கின்ற சுகாதார துறையினரால் சில கேள்விகள் கேட்கப்படும். அதாவது தடுப்பூசி போடப்படுவதற்கு அவர்கள் தகுதியானவர்களா என அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து தடுப்பூசி சம்பந்தப்பட்டவர்களுக்கு போடப்படும். தடுப்பூசி போடப்பட்ட பின்னர் அவர்கள் 30 நிமிடங்கள் மற்றுமொரு அறையில் தங்க வைக்கப்படுவார்கள். அதாவது ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுகின்றதா என்பதை இதன் போது நாம் பார்ப்போம். 30 நிமிடங்கள் அவதானிக்கப்பட்ட பின்னரே தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் செல்லமுடியும். அவர்களுக்கு ஒரு அட்டை வழங்கப்படும். அந்த அட்டையில் அவர் இரண்டாவது தடவை எப்போது தடுப்பூசி ஏற்றுவதற்கு வரவேண்டும் என்ற திகதிகள் குறிக்கப்பட்டு வழங்கப்படும்.
கேள்வி: பக்க விளைவுகள் குறித்து பேசப்படுகின்றதே?
பதில்: பக்க விளைவுகளை பொறுத்தவரையில் சாதாரணமாக நாம் தடுப்பூசி ஒன்றை போடும்போது ஏற்படுகின்ற ஒரு சில நிலைமைகளை கூற முடியும். பொதுவாக தடுப்பூசி போடப்பட்ட பின்னர் சிறிய காய்ச்சல் ஏற்படலாம், அல்லது தடுப்பு ஊசி போட்ட இடத்தில் வலி இருக்கலாம், இவை சாதாரணமான விடயங்கள். நாங்கள் சம்பந்தப்பட்டவரை 30 நிமிடங்கள் அவதானிப்பதற்கு காரணம் வேறு ஏதாவது பாரதூரமான விளைவுகள் ஏற்படுகின்றதா என்பதை பார்ப்பதற்காகவாகும். அதாவது அவ்வாறு ஏற்படும் சந்தர்ப்பங்கள் மிக மிக அரிதாகவே இருக்கின்றன. ஆனால் நாங்கள் மிக அவதானமாக பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை பார்ப்போம். அவ்வாறு ஏற்படுமிடத்து அவர்களுக்கு தேவையான அடுத்த கட்ட மருத்துவ சிகிச்சை நிலைமைகள் அனைத்தும் அங்கு தயார் செய்யப்பட்டிருக்கும். எனவே எவரும் இங்கு அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. எல்லாம் தயார் நிலையில் இருக்கும். சகல வசதி கொண்ட அம்புலன்ஸ் வண்டி தயாராக அங்கு இருக்கும். அதுமட்டுமன்றி குறித்த தடுப்பூசி கட்டாயமாக ஒரு வைத்தியரினாலேயே சம்பந்தப்பட்டவருக்கு போடப்படும். அது ஒரு சிறிய ஊசி. கையில் மேல் பக்கத்தில் போடப்படும். மிக மிக சிறிய ஊசி. கொஞ்சம் மருந்து அதில் இடப்பட்டிருக்கும். பெரிய வலி எதுவும் இருக்காது. சிறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன. ஆனால் பாரதுரமான பக்க விளைவுகள் ஏற்படவில்லை.
கேள்வி: இரண்டு தடுப்பூசிகளை ஒருவர் போட்டுக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் எவ்வளவுகால இடைவெளியில் அவர் இந்த இரண்டாவது தடுப்பூசியை பெறவேண்டும்? தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பின்னர் அவரை எவ்வாறு சுகாதார நிலைமைகளை பின்பற்றவேண்டும்? உணவு கட்டுப்பாடு எதுவும் அவசியமா? முதலாவது தடுப்பூசியின் பின்னர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இரண்டாவது ஊசியின் பின்னர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக விளக்குங்கள்?
பதில்: முதலாவது தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட பின்னர் நாம் தற்போது எவ்வாறு சுகாதார அறிவுறுத்தல்களை போகின்றோமோ அதேபோன்று கைகழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் முகக்கவசம் அணிதல் ஆகியவற்றை கட்டாயமாக செய்ய வேண்டும். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது நாங்கள் கூறுகின்ற சுகாதார கட்டுப்பாடுகள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். அதேநேரத்தில் உணவு விடயங்கள் தொடர்பில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் இல்லை. எதையும் சாப்பிடலாம். நான்குவார இடைவெளியில் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னரும் கூட அவர் குறித்த சுகாதார அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.
கேள்வி: எதற்காக அவ்வாறு செய்யவேண்டும்?
பதில்: காரணம் அவருக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகுவதற்கு சிறிய காலம் தேவைப்படும். உடனடியாக மேஜிக் போன்று எதிர்ப்புசக்தி உருவாகாது. தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகிய பின்னரும் அவர் தொடர்ந்து ஏன் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றால் சம்பந்தப்பட்டவருக்கு எதிர்ப்புசக்தி உருவாகியவுடன் அவருக்கு வைரஸ் தொற்றாது. ஆனால் நீங்கள் ஒரு இடத்தில் சென்று எதையாவதை தொட்டால் அல்லது மற்றவரிடமிருந்து உங்கள் கைகளுக்கு அல்லது உங்கள் தோல்களில் வைரஸ் ஒட்டிக்கொண்டால் அவை அங்கு தங்கியிருக்கும். உதாரணமாக கையில் வைரஸ் தங்கியிருக்கலாம். அப்போது நீங்கள் அதே கையுடன் வீட்டுக்கு சென்று அங்கே கைகளை கழுவாமல் கைகளினால் வேறு இடங்களை ஏனைய பொருட்களை தொடும் பட்சத்தில் அது வீட்டில் இருக்கின்ற தடுப்பூசி போடாதவர்களுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம். சமூகத்தில் இருக்கின்ற அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதற்கு எமக்கு குறிப்பிட்ட கால எல்லை அவசியமாகும். அதுவரை இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும். அதிகளவானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் இதில் தளர்வுகளை செய்யலாம்.
கேள்வி: முதலாவது தடுப்பூசியை போட்டுக்கொண்டு ஒருவர் இரண்டாவது தடுப்பூசியை போடுவதற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருக்கின்றதா?
பதில்: இல்லை என்றே அதற்கு கூறவேண்டும். முதலாவது தடுப்பூசியிலேயே சம்பந்தப்பட்டவருக்கு ஒரு அளவுக்கான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடும். கணிசமான சக்தி உருவாகிவிடும். ஆனால் பூரணமான எதிர்ப்பு சக்தி உருவாகுவதற்கு இரண்டாவது தடுப்பூசி போடப்பட வேண்டும். எனவே இடையில்வைரஸ் தாக்கம் ஏற்படுவதற்கு சாத்தியமில்லை.
கேள்வி: சுகாதாரத் துறையினர் எந்த அடிப்படையில் இவ்வளவு தூரம் நம்பிக்கையாக இதனை பற்றி பேசுகின்றனர்?
பதில்: எங்களுக்கு இதற்கான ஆதாரங்கள் உள்ளன. கொரோனா வைரஸ் தாக்குவதை தடுப்பற்கான தடுப்பூசிகள் தொடர்பில் இதுவரை நாங்கள் உலகளாவிய பார்த்த விடயங்களின் அடிப்படையில் இதில், நாம் நம்பிக்கை வைக்கிறோம். மிக முக்கியமாக இந்த தடுப்பூசி திடீரென உருவாகவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடமாக பாரியளவில் ஆராயப்பட்டே தற்போது தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தடுப்பூசியை தயாரித்து விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு போட்டு பரிசோதனை செய்தே இதனை உறுதிப்படுத்திருக்கிறார்கள். எல்லா நாடுகளும் மூன்று நிலைகளில் இது தொடர்பான பரிசோதனைகள் செய்து இந்த முடிவுக்கு வந்திருக்கின்றன. அவ்வாறு முடிவுக்கு வந்த பின்னர் குறித்த நாடுகளின் சுகாதார நிறுவனங்கள் இதற்கான அனுமதியை கொடுத்திருக்கின்றன. அந்த அனுமதி கொடுத்த பின்னரே நாம் அவற்றை பயன்படுத்துகிறோம். பல கட்டங்கள் பல பரிசோதனைகளை தாண்டி நிரூபிக்கப்பட்ட பின்னரே இந்த தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. எனவே மக்கள் நம்பிக்கையுடன் தடுப்பூசியை எடுக்கவேண்டும்
கேள்வி: தடுப்பூசியை யார் எடுக்கக்கூடாது ?
பதில்: கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார் விரைவில் தாயாக எதிர்பார்க்கின்றவர்கள் இதனை எடுக்கக்கூடாது. காரணம் அவர்களுக்கு ஏற்படுகின்ற விளைவுகள் தொடர்பான ஆய்வுகள் இதுவரை போதுமானதாக இல்லை. கடந்த ஒரு வருட காலமாகவே இந்த பரிசோதனைகள் இடம்பெறுகின்றன. எனவே அதில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பான ஒரு தெளிவற்ற தன்மை இருக்கின்றது. எனவே கர்ப்பிணிகள் பாலூட்டும் தாய்மார் விரைவில் கர்ப்பிணியாக போகின்றவர்கள் இதனை போடக்கூடாது. அதுமட்டுமன்றி கடுமையான அலர்ஜி உள்ளவர்கள் தடுப்பூசி பெற முன்னர் வைத்திய ஆலோசனைகளை பெற்ற பின்னரே தடுப்பூசி பெறவேண்டும். சிலருக்கு சில உணவுகளை உண்டதும் உடம்பு முழுவதும் தடித்துவிடும். அதுபோன்ற அழட்சி உள்ளவர்கள் இதனை போடக்கூடாது. அதனால்தான் தடுப்பூசி போடப்பட முன்பதாக மக்களிடம் நாங்கள் கேள்வி கேட்கும் ஒரு பொறிமுறையை மேற்கொண்டுவருகிறோம். அவ்வாறானவர்கள் ஒரு பெரிய வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய ஒரு நிலையிலேயே தடுப்பூசியை போட்டுக்கொள்ளவேண்டும். இதில் வைத்தியர் தீர்மானம் எடுக்கலாம்.
கேள்வி: எமக்கு உரிய முறையில் தடுப்பூசிகள் கிடைக்கும் பட்சத்தில் விரைவாக நாட்டு மக்களுக்கு அதனை போட்டு விட முடியுமா?
பதில்: முடியும். அதற்கான ஒரு பெரிய ஒரு திட்டத்தையும் பொறிமுறையையும் நாங்கள் உருவாக்கி இருக்கின்றோம். ஒரு தேர்தலைப் போன்று தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நடைபெறும். முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு மூன்று நாட்களில் தடுப்பூசிகளை கொடுத்துவிடுவோம். திட்டமிட்ட அடிப்படையில் இந்த தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெறும். அதாவது உதாணரமாக யாழ். வைத்தியசாலையில் சுகாதார துறையினருக்கு சகாதார துறையினருக்கு தடுப்பூசிபோடப்படும்போது குருநாகல் வைத்தியசாலையிலும் வழங்கப்படும்.
கேள்வி: சனத்தொகையில் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது?
பதில்: ஒரு குறிப்பிட்ட தொகையினருக்கு போடப்படும். ஆனால் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி போடப்படாது. தற்போதைக்கு உடனடியாக அவர்களுக்கு போட மாட்டோம். அவர்களுக்கு பின்னர் தடுப்பூசி போடுவது குறித்து யோசிக்கலாம்.
கேள்வி: இந்தியாவின் தடுப்பூசிக்கு இலங்கையின் மருத்துவ சபை அனுமதி வழங்கிவிட்டதா?
பதில்: இலங்கை மருத்துவ சபை அதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது
கேள்வி: தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாகவா வழங்கப்படும்?
பதில்: இலங்கை மக்களுக்கு இந்தத் தடுப்பூசிகள் முற்றுமுழுதாக இலவசமாகவே போடப்படும். இலங்கை இலவச மருத்துவ சேவை வழங்க நாடு என்ற வகையில் இலவசமாகவே இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும். மறுபுறம் ஒரு தடுப்பூசி ஆறு டொலர் பெறுமதி கொண்டதாக இருக்கின்றது. இரண்டு கோடி மக்களுக்கு தடுப்பூசி பெறுவது என்றால் 12 கோடி டொலர் செலவு ஏற்படுகின்றது. இந்த 12 கோடி டொலரை செலவழிப்பதால் எமக்கு பாரிய இலாபம் கிடைக்கும்.
தடுப்பூசி போட்டு வைரஸை கட்டுப்படுத்திவிட்டால் நாம் சகல தொழிற்சாலைகளையும் இயங்க வைக்கலாம். தொழில்களை ஆரம்பிக்கலாம். பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்து பொது நிறுவனங்களும் இயங்க ஆரம்பிக்கும். மக்களின் அழுத்தம் குறையும். பொருளாதார ரீதியில் பாரிய இலாபத்தை நாம் அடைவோம்.
உற்பத்தித்திறன் அதிகரிக்கும். இதனால் நாட்டுக்கு கிடைக்கப்போகும் வருமானம் மிகப்பெரியதாகும். சுகாதார துறையினர் தற்போது பாரிய களைப்பில் இருக்கின்றனர். அவர்களுக்கும் இந்த வைரஸை அகற்றி விட்டோம் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படும்போது பாரியதொரு சிறந்த ஆரோக்கிய நிலை ஏற்படும்.
எனவே இந்த தடுப்பூசிகளால் நாட்டுக்கு பெரியதொரு நன்மை கிடைக்கும். சமய வழிபாடுகள் ஆரம்பித்துவிடும். இது மக்களுக்கு ஒரு ஆன்மீக சுகத்தை பெற்றுக் கொடுக்கும். ஆன்மீகமும் இந்த பொது ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு இருக்கின்றது.
கேள்வி: எப்போது விடிவு காலம் பிறக்கும் என்று நம்புகிறீர்கள்?
பதில்: ஆம். விடிவுகாலம் ஒன்று தெரிகிறது. வருட இறுதியில் விடிவு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.