சமூக ஊடகங்கள் ஏன் முடக்கப்பட்டன?:பல கேள்விகளுக்கு பதிலை கோரும் எதிர்க்கட்சித் தலைவர்
நாடாளுமன்றத்திற்கு அருகில் பொல்துவ சந்தியில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இடையில், துப்பாக்கிகளுடன் சீருடையில் மோட்டார் சைக்கிள்களில் நபர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தது யார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் இடத்தில் நாட்டின் சாதாரண மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மிகப் பயங்கரமான ஒன்றை நாங்கள் பார்த்தோம். முகமூடி, சீருடை அணிந்து, பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள்களில் துப்பாக்கிகளுடன் ஆர்ப்பாட்டகாரர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
பொலிஸார் அவர்களிடம் அவர்கள் யார், எங்கிருந்து வந்தீர்கள், எதற்கு வந்தீர்கள் என்று விசாரிக்கின்றனர். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பது பொலிஸார். மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் யார் என்பதை நான் அறிய விரும்புகிறேன். இலக்க தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கிள்கள்.
முகத்தை மூடிய நபர்கள். அவர்கள் வேறு அணி, வேறு குழுவா அல்லது இரகசியமான படையினரா?. இவற்றுக்கான பதில்களை நாங்கள் அறிய வேண்டும்.
அரசாங்கம் ஏன் நாட்டின் அவசர காலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியது என்பது தொடர்பான எமக்கு தெளிவான விளக்கம் தேவை. நாட்டில் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டதா?. பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஏதேனும் தகவல் கிடைத்ததா?.
நாட்டின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலைமை உருவானதா?. இதனால், எந்த காரணத்திற்காக அவசர காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது?.
அத்துடன் எதற்காக ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது?. அதேபோல் ஏன் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டன?. இவற்றுக்கான காரணங்கள் என்ன?. இவற்றுக்கு அரசாங்கத்திடம் இருந்து தெளிவான பதில் அவசியம். வாத விவாதங்களுக்கு முன்னர் நாங்கள் காரணத்தை அறிந்துக்கொள்ள வேண்டும்.
மேலும் நாட்டின் தற்போதைய நிதியமைச்சர் யார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் தற்போது நிதியமைச்சர் ஒருவர் இல்லை. நேற்று நிதியமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்டதும் நாடாளுமன்றத்திற்கு வந்து அறிக்கை எதனையே முன்வைத்தார்.
அதன் பின்னர் பதவி விலகினார். நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நடந்துக்கொண்டிருந்த போது நிதியமைச்சின் செயலாளர் பதவி விலகினார். இப்படியான நிலைமையில், நாட்டின் நிதியமைச்சர் யார் என்பதை நாங்கள் அறிந்துக்கொள்ள வேண்டும்.
யார் திறைசேரியின் செயலாளர். அவர்கள் இல்லாத நிலையில் நாடு அராஜக நிலைக்கு சென்றுள்ளது. நாடு வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் நிதி முகாமைத்துவத்தை எப்படி கையாள்வது. இவற்றுக்கு பதில் தேவை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.