கொழும்பில் பரிதாபமான முறையில் கணவன், மனைவி பலி - பொலிஸார் வெளியிட்ட காரணம்
கொழும்பு, ஹோமாகம பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாகம்மன பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றின் அடித்தளத்தில் தீ பரவியதில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளதுடன் அவர்களது இரு மகள்களும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர் இருவருக்குள் ஆறு வயதுடைய பாடசாலை மாணவியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து
கடந்த 25ஆம் திகதி இரவு குறித்த அறையில் கணவன், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இருந்த நிலையில் தீ விபத்து ஏற்பட்டு நால்வர் படுகாயமடைந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு வயது மகள் பொரளை சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஏனைய மூவரையும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க செல்லும் போது 47 வயதான கணவர் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த உயிரிழந்தவரின் மனைவியும் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.
ஹோமாகம மாகமனையை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதான லசந்த புத்திக ரணசிங்க , 35 வயதான நளிகாதேவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
எரிபொருள் நெருக்கடியால் வந்த வினை
19 வயதான மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர்களின் உயிரிழப்புக்கு நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியே காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீட்டில் கொள்கலன் ஒன்றில் சேமித்து வைத்திருந்த பெட்ரோலினால் தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைணகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.