யார் சம்பந்தன்? அவருக்கு மகுடமா? படுகுழியா?
மரணம் மனிதனுக்கு அனைத்திலும் இருந்து விடுதலையை அளிக்கிறது ஆம் உண்மைதான். இதைத்தான் அனைத்து மதங்களும் சொல்கின்றன.
அனைத்து தத்துவங்களும் சொல்கின்றன. இது சாதாரண மனிதர்களுக்கு முற்றிலும் பொருத்தமானது தான். மனிதனின் இறப்பின் பின் அவனின் நல்ல விடயங்களை பேசுவதம், கசப்பானவற்றை மறந்து அவன் இறைவனடி சேர்ந்தார் என போற்றும் ஒரு மனித பண்பு இந்த மனித குலத்தின் மாண்பின் உச்சம்தான்.
அதனைத்தான் மனித விழுமியங்களாக இந்த உலகம் கருதுகின்றது. அப்படி இருக்கையில் இன்று ஈழத் தமிழினத்தின் தலைமை என கருதப்படும் இரா. சம்மந்தனின் மரணத்தின் பின் பல்வகைப்பட்ட சலசலப்புகள் தமிழ் சமூகத்திலிருந்து எழுகிறது.
அதைப் பற்றி வியாக்கியானப்படுத்த வேண்டிய தேவையும் தற்போது எழுந்துள்ளது. என்ற அடிப்படையில் இந்த பத்தி வரையப்படுகிறது.
சமூகத்தின் அறிவியல் மட்டம்
மனித குலத்தின் உயரிய விழுமியங்களளை பல சந்தர்ப்பங்களில் மனித சமூகத்தின் ஒரு பகுதியினர் மீறுகின்றனர். அதற்கான காரணங்கள் பல. “ஒரு சமூகத்தின் அறிவியல் மட்டம் என்னவோ அந்த அறிவியல் மட்டத்தின் அளவிலிருந்துதான் அந்த அளவுக்கு உட்பட்டதாகவே அந்தச் சமூகத்தின் பிரதிநிதிகளும் தலைவர்களும் தோன்றுவார்கள்.”
இது இயற்பியல் விதி. அதனை மார்க்சிசம் இயங்கியல் விதி என்கிறது. இவை தவிர்க்க முடியாததுதான்.
சமூகத்தின் இருப்பிட சூழலியலினதும், அறிவியலினதும் பிரசவம்தான் நல்ல மனிதர்கள், கெட்ட மனிதர்கள், முற்போக்கானவர்கள், பிற்போக்கானவர்கள், தீர்க்கதரிசிகள், வழிகாட்டிகள் என அனைத்து சமூகப் பிரதிகளும் தோன்றுவர் என்று சொல்வதுதான் பொருத்தமானது.
இத்தகைய பல்வகைப்பட்ட மனிதர்களின் கூட்டைத்தான் சமூகம் என்கிறோம். இவர்களே அந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த தொகுப்பாகவும், சமூகத்தின் பண்பாடாகவும், சமூகத்தை உருத்திரட்டி இயங்கவல்ல போக்காகவும் அமைகிறார்கள்.
இத்தகைய பல்வகைப்பட்ட மனிதர்களை ஒதுங்கிணைப்பதும், ஒருங்கிசைய வைப்பதும், சமூகத்தை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச்செல்வதும், அச்ச முகத்தை வழிநடத்துகின்ற ஆளுமைகள் அல்லது தலைமைகளின் பொறுப்பாகிறது.
அத்தகைய பொறுப்பு வகிப்பவர்கள் முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச்செல்ல தவறின் அவர் மீதான பல்வகை விமர்சனங்கள் மரணத்தின் முன்னும், மரணத்தின் பின்னும் எழக்கூடும்.
மனிதக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பு
அவ்வாறு எழுவதும் தவிர்க்க முடியாததுதான். ஆனால் அத்தகைய விமர்சனங்கள் முற்றிலும் அறிவியல் மையப்பட்டதாக இருக்க வேண்டுமே அன்றி தனிப்பட்ட காழ் புணர்ச்சிகளுக்கு உள்ளால் அல்லது காழ்ப்புணர்வுகளின் அடித்தளத்திலிருந்து கட்டமைக்கப்படக்கூடாது.
ஒரு சமூகத்தின் வாழ்வுக்கும், வளத்திக்குமான அடித்தளத்திலிருந்தும் விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டதாகவுமே விமர்சனங்கள் எழ வேண்டும். அதுவே அந்தச் சமூகத்தின் ஆரோக்கியமான எதிர்காலத்தை தீர்மானிக்க வல்லது.
சாதாரண மனிதனுக்கு மரணம் என்பது அனைத்திலும் இருந்து விடுதலையை தருகிறது. ஆனால் ஒரு மனிதக் கூட்டத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றவன் அவ்வாறு தன்னையேற்று நம்பிய மனித கூட்டத்தின் விருப்பு வெறுப்புகளை புரிந்து கொள்ளாமல், அந்த மனித கூட்டத்தை தன்னுடைய ஆளுமைக்குள் கட்டுப்படுத்த முடியாமல், அந்தச் சமூகம் தமக்கு அவர் எதையும் செய்யவில்லை, எம்மை ஏமாற்றிவிட்டார்கள் என்று கருதும்பட்சத்தில் அந்த தலைமைத்துவ மனிதனை மரணத்தின் பின்னும் அந்த மக்களினால் விடுதலை அளிக்கப்பட மாட்டார்.
மரணத்தின் பின்னும் மன்னிக்கப்பட மாட்டாதவராக அந்தச் சமூகத்தினால் கருதப்படும். இதுவும் அந்தச் சமூகத்தின் அறிவியல் மட்டத்தின் அளவிலிருந்துதான் தோன்றுகின்றது, அல்லது எழுகின்றது என்பதை மீண்டும் இங்கே வலியுறுத்தக்கூற வேண்டியுள்ளது.
ஹிட்லர் மரணித்துவிட்டார் என்பதற்காக அவரது தீங்குகளை மன்னித்து அவரது உடலுக்கு மரணக் கிரிகையில் மணிமகுடம் சூடியதில்லை.
""வரலாற்றுக்கு மன்னிக்கத் தெரியாததை தவிர தெரியாதது என்ற ஒன்றும் இல்லை"" இந்த வகையில்தான் இன்றைய ஈழத் தமிழ் சமூகத்தின் பல்வகைப்பட்ட பரிமாணங்களை பார்க்க வேண்டும்
இரா .சம்பந்தன் ஈழத் தமிழர் அரசியலில் மூத்த ஒரு அரசியல்வாதி. அவருடைய அரசியல் செல்நெறி என்பது அவருக்கே உரித்தானது.
தமிழ் மக்களின் அரசியல் தலைமை
அவர் பிறப்பினாலும் குடும்ப வளர்ப்பினாலும் மற்றும் வளர்ச்சியினதும் வாழ்விடத்தினதும் சூழலியல் தாக்கம் அவருடைய இயல்பையும் அரசியல் போக்கையும் தீர்மானித்த காரணிகள் ஆகின்றன. அத்தகைய ஒரு பல்வகைப்பட்ட அதிகம் பேசாத தான் நினைத்ததை மாத்திரமே பேசுகின்ற அல்லது அதற்கு எதிர்ப்பு ஏற்படுகின்ற போது அமைதியாக இருக்கின்ற சூழலுக்கு ஏற்றவாறு தன்னை பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டவர்தான் இரா. சம்பந்தர்.
யார் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன 2004 ஆம் ஆண்டில் இருந்து 2024 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகள் தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்று இந்த உலகம் கருதுவது சம்பந்தனைத்தான்.
அது மட்டும் அல்ல ஈழத் தமிழரின் பெரும்பான்மையினர் அவர் தலைமை தாங்கிய அரசியல் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். அவர் தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தருவார் என்பதை தமிழ் மக்கள் நம்பி இருக்கின்றனர்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் கடந்த நான்கு தேர்தல்களிலும் அவரை வெல்ல வைத்திருக்கின்றனர் என்ற உண்மையை மறந்திடக்கூடாது.
எனவே அவர் வாழும்போது அவருடைய அரசியலில் முரண்பட்டவர்களும் அவர் மரணத்தின் பின் அவர் அரசியல் முரண்பாடுகளை முன்வைப்பவர்களும் இருப்பது தவிர்க்க முடியாததுதான்.
இவை அனைத்தும் தமிழ் சமூகத்தின் அறிவியல் மட்டத்தின் பிரசவிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.
சம்பந்தன் அரசியல் தலைமைத்துவ காலத்திற்கு முந்திய கால அரசியல் தலைமைகள் பற்றியும் இங்கு பார்க்க வேண்டும்.
இலங்கை சுதந்திரத்துக்கு முன்னான அரசியல் தலைமையாக சேர். பொன். ராமநாதன் இருந்தார் அவரின் இயல்பையும் அவர் வாழ்விடத்தையும் சூழலியலையும் இங்கே கவனிக்க வேண்டும் அவ்வாறே அவருக்கு பின்னர் 1936 ஆம் ஆண்டிலிருந்து 1956 ஆம் ஆண்டு வரை ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமை தாங்கினார்.
அவருடைய இயல்பையும் வாழ்விடத்தையும் சூழலியலையும் கவனித்து பாருங்கள்.
ஆயுதப் போராட்டம்
அவ்வாறே அவருக்கு பின் 1956 ஆம் ஆண்டிலிருந்து 1976 ஆம் ஆண்டு வரை எஸ் .ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் தலைமை தாங்கினார். அவருடைய வாழ்விடம் சூழலியல் என்பவற்றையும் கருத்திற் கொள்ளவேண்டும் 1976 ஆம் ஆண்டிலிருந்து எண்பதின் நடுப்பகுதி வரை ஏறத்தாழ ஒரு 10 ஆண்டுகள் அமிர்தலிங்கம் அரசியல் தலைமை என்ற நிலையில் இருந்தார்.
அதற்குப் பின்னர் ஆயுதப் போராட்டம் அந்தத் தலைமைத்துவத்தை சுமார் 25 ஆண்டுகள் தம் கையில் வைத்திருந்தது ஆனாலும் 2004ஆம் ஆண்டு ஆயுத தலைமையினால்தான் அரசியல் தலைமைத்துவம் சம்பந்தரின் கையில் கொடுக்கப்பட்டது என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
சரி - பிழை, விருப்பு - வெறுப்பு என்பவற்றைத் தாண்டி 2004ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் வாதி என்ற அடிப்படையில் அவருக்கு என்று ஒரு வரலாறு பாத்திரம் உண்டு என்பதை யாரும் மறக்க முடியாது.
ஆனாலும் அவர் தமிழ் மக்களிடம் சென்று மக்களின் வலிகளை கேட்டவரும் அல்ல, அதை உணர்ந்தவரும் அல்ல. கடந்த 40 ஆண்டுகளில் எங்கள் தேசத்தின் மண்ணில் தங்கி இருந்தது ஒரு சில நாட்களே.
கொழும்பை வாழ்விடமாகக் கொண்டு சிங்கள தேசத்தின் வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டதனால்தான் என்னவோ தமிழ் மக்களின் வலியும் வேதனையும் அவர்களின் சுதந்திர வேட்கையும் அவருக்கு புரியாமல் போய்விட்டது என்பதும் உண்மைதான்.
"பானையில் உள்ளதுதான் அகப்பையில் வரும்" என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அவ்வாறுதான் சம்பந்தர் அவர்களுடைய ஆளுமையையும் அரசியல் செயற்பாடுகளையும் அரசியல் அடைவுகளையும் தமிழ் சமூகம் பார்க்க வேண்டும்.
மாறாக தன்னிகரற்ற தலைவராகவும் தீர்க்கதரிசனம் மிக்க தலைவராகவோ அல்லது மானசீகத் தலைவராகவோஅவர் இருக்க முடியாது. மாறாக அவ்வாறு பார்க்க முற்படுபவர்களால்தான் அவர் மீதான கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தொன்மையான தமிழர் பண்பாட்டு
இத்தகைய அனைத்து மிதவாத அரசியல் தலைமைகளில் அமிர்தலிங்கம் தவிர்ந்த அனைவரும் தமிழர் தாயகத்தில் வாழவில்லை.
இவர்கள் அனைவரும் கொழும்பை வாழ்விடமாகக் கொண்டவர்கள். இராமநாதன் வம்சம் முதல் செல்வநாயகம் வரை சுமாராக ஒன்றரை நூற்றாண்டுகளாக இதுதான் உண்மை.
அவர்களுடைய தொடர்பானவர்கள் அனைத்தும் சிங்கள ச சமூகத்துடனே பின்னிப் பிணைந்து காணப்பட்ட நிலையில் அவர்கள் சிங்கள சமூகத்துடன் இணைந்து வாழவும், அண்டி வாழவும் பழக்கப்பட்டவர்கள்.
அவர்கள் மண்ணோடு ஒட்டிய வாழ்வை கொண்டவர்கள் அல்ல, மண்ணையும் மக்களையும் நேசிக்கவில்லை.
அத்தகைய மனநிலையும் அவர்களுக்கு இருந்திருக்கவில்லை இந்த நிலையில் அவர்களினால் ஈழத் தமிழ் மக்களுடைய வலிகளையும், வேதனைகளையும், இலட்சிய வேட்கைகளையும் சரிவர புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது என்பதும் ஒரு வகையில் உண்மைதான்.
ஒவ்வொரு விதவாத அரசியல் தலைவர்களும் அவர்கள் தங்கள் அறிவியல் மட்டத்துக்கு ஏற்ற வகையிலேயே அரசியலைச் செய்தார்கள் என்பதும் உண்மைதான்.
ஆகவே இத்தகைய அறிவியல் மட்டத்துக்குள் இருந்து வந்த அரசியல் தலைமைகளால் அந்த அறிவியல் மட்டத்துக்குள்ளே நின்று கொண்டுதான் தமது அரசியலையும் ஆளுமையையும் வெளிப்படுத்த முடியும் என்பதை அறிவார்ந்த ரீதியில் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய அறிவியல் கருத்துக்களை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியதும் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
இங்கே தமிழ் மக்கள் ஒரு பெரும் அரசியல் இராணுவ தோல்வியை சந்தித்ததன் வெளிப்பாடாய் அந்தத் தோல்வியிலிருந்து மீள முடியாமல் திகைத்துப்போய் நிற்கிறார்கள். இதிலிருந்து அறிவார்ந்த வகையில் விரைவாக மீளவேண்டும்.
ஒரு மனிதனை அவனின் மரணத்தின் பின்னும் விமர்சிக்கின்ற மனித பண்புகள் வீழ்ச்சி அடைந்த சமூகத்தை சின்னாபின்னம் ஆக்கிவிடும். இத்தகைய போக்கு தொன்மையான தமிழர் பண்பாட்டை சிதைத்துவிடும்.ஆகவே தமிழ் சமூகம் ஓர் அறிவார்ந்த. பார்வைக்குச் செல்ல வேண்டும்.
தமிழ் மக்களை அறிவியல் மயப்படுத்தாமல் தமிழ் சமூகத்திற்கான அரசியல் விடுதலை என்பது ஒருபோதும் சாத்தியமில்லை. தமிழ் மக்களை அறிவியல் மையப்படுத்துவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பது உண்மைதான் எனினும் அதற்கான அடி கற்களை நாட்டுவது உடனடி தேவையாக உள்ளது.
இந்த கையில் சம்பந்தனின் மரணத்தை ஏற்றிப் புகழ்வதிலிருந்து நோக்காமல் அவர் என்ன செய்தார் , அவர் தமிழ் மக்களுக்கு உன்னத்தை விட்டுச் சென்றுள்ளார் என்பதிலிருந்து பார்க்க வேண்டும்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 11 July, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.