வடக்கு மாகாணத்தில் வெண்ணிற ஈ தாக்கமும் அதற்கான தீர்வும்(video)
வடக்கு மாகாணத்தில் தென்னை பயிர்ச்செய்கையில் காணப்படும் வெண்ணிற ஈ தாக்க பிரச்சினையை நாங்கள் இயலுமான அளவு கட்டுப்படுத்துவதற்கு முயன்று கொண்டிருந்தாலும், இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என தென்னை பயிர்ச்செய்கை யாழ். பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
வெண்ணிற ஈ தாக்கம்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“வெண்ணிற ஈ என்பது ஒரு வெள்ளை இலையான். அது தென்னையில் மட்டுமல்ல, தென்னை, மாதுளை, உழுந்து, பயறு, வாழை போன்ற மரங்களிலே தாக்கத்தை ஏற்படுத்தும்.
தென்னையில் தாக்குகின்றது வைரஸ் ரூகோஸ் வைரஸ் எனப்படுகிறது.
வெண்ணிற ஈ அதன் வாழ்க்கை காலத்தில் 200 மடங்கு இனப்பெருக்கத்தை செய்யக்கூடியது.
குளிரான காலங்களில் அதன் வளர்ச்சி குறையும். இந்த வருடம் தை மாதம் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இது அடையாளப்படுத்தப்பட்டது.
பின்னர் அது படிப்படியாக யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேச செயலக பிரிவு, யாழ்ப்பாண பிரதேச செயலக பிரிவு ஆகிய பகுதிகளில் உள்ள தென்னைகளை தாக்க தொடங்கியுள்ளது.
இதனை அடையாளம் கண்டு அழிக்காவிட்டால் பின்னர் இது தென்னையினை பெரிய அளவில் தாக்கும். இது தென்னையின் ஓலைகளில் வெள்ளை நிறத்தில் கோடுகளாக உப்பு படிந்தது போல் இருக்கும். மேலே கறுப்பு படிவம் இருக்கும்.
இது சூட்டிமோல்ட் பங்கஸினால் ஏற்படுத்தப்படுகிறது. இது ஒளித்தொகுப்பை குறைத்து, உற்பத்தியை குறைத்து படிப்படியாக தென்னையை அழிக்கும்.
பிரச்சினைக்கான தீர்வு
இதற்கான சிகிச்சை முறைகளாக நீர்ப்பாசனம் விசுறுதல், வேப்பெண்ணெய் கரைசல் மற்றும் சவர்க்காரத்தூள் கரைசலை கலந்து தென்னைக்கு முற்று முழுதாக விசுறுதல், அக்டா என்ற இரசாயனப் பொருளை 15 நாட்களுக்கு ஒரு தடவை விசுறுதல், அங்கீகரிக்கப்பட்ட கிருமி நாசினிகள் விசிறல், கோலம் மா என சொல்லப்படுகின்ற கோதுமை மா மற்றும் அரிசி மா ஆகியவற்றை சேர்த்து, ஒரு கிலோ மாவிற்கு 20 லீட்டர்கள் தண்ணீரை கலந்து விசுறுதல் போன்றன காணப்படுகின்றன.
இந்தியா தமிழ்நாட்டில் இந்த கோலம் மா சிகிச்சை முறை வெற்றியளித்துள்ளது. அதன் பிரகாரம் அவர்களது அறிவுரையின்படி நாங்கள் இதனை செய்கிறோம்.
ஆனால் இது இன்னமும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் சொல்லப்படவில்லை. இரவு 7 தொடக்கம் 11 மணிவரை நெருப்பு அல்லது மஞ்சள் வெளிச்ச விளக்குகள் கொழுத்துவதன் மூலம் அவை அந்த வெளிச்சத்தில் விழுந்து உயிரிழக்கும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே உங்களது தென்னை பயிர்ச்செய்கைகளை நீங்கள் மிகவும் கவனமாக
பாதுகாக்க வேண்டும்.”என தெரிவித்துள்ளார்.