கந்தளாய் தென்னை மரங்களில் வெண்ணிற ஈ தாக்கம் அதிகரிப்பு! விவசாயிகள் கவலை (video)
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் வெண்ணிற ஈ நோய் தாக்கம் காரணமாக சுமார் ஐயாயிரம் ஏக்கர் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பேராறு, பேராற்று வெளி வட்டுகச்சி, வான்எல, அக்போபுர அக்போகம, முள்ளிப்பொத்தானை மற்றும் தம்பலகாமம் போன்ற பகுதிகளில் இந்நோய் தாக்கம் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் வேண்டுகோள்
இது தொடர்பில் விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது,
வெண்ணிற ஈ நோய்த் தாக்கத்தால்,பல தென்னம் தோட்டங்கள் அழிவடைந்து வருகின்றன.
பல்வேறு வகையான கிருமி நாசினிகள் மற்றும் மருந்துகள் தெளித்தும் இதுவரைக்கும் சரியாகவில்லை.
இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அறிவித்த போதும் இதுவரைக்கும் குறித்த பகுதிக்குச் சென்று பார்வையிடவில்லை.
எனவே விவசாய அமைச்சு, மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்தி வெண்ணிற ஈ நோயைக் கட்டுப்படுத்தி தருமாறு மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.