கொல்லப்பட்ட யுவதியின் தலையெங்கே? பொலிஸார் தீவிர விசாரணை
கொழும்பு - டாம் வீதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதியின் தலையை கண்டுப்பிடிக்க பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், யுவதியை கொலை செய்து பயணப் பெட்டியில் கொண்டுவந்து கொழும்பில் கைவிட்டுச் சென்ற சந்தேகநபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இன்று காலை மீட்கப்பட்டார்.
கடந்த முதலாம் திகதி கொழும்பு - டாம் வீதியில் வைத்து வர்த்தகர்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய தலையின்றி பெண் ஒருவரின் சடலம் பயணப் பெட்டியிலிருந்து மீட்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் குறித்த சடலத்தை கொண்டுவந்து கைவிட்டுச் சென்ற நபர் குறித்த தகவல்களை பொலிஸார் அறிந்துகொண்டனர்.
இதன்படி, சந்தேக நபர் புத்தள காவல்துறையில் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் என்பதை விசாரணைக் குழுவால் உறுதிப்படுத்த முடிந்தது. இந்நிலையிலேயே, படல்கும்புர பகுதியில் சந்தேகநபர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இறந்த இடத்திற்கு அருகில் விஷ போத்தல் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 52 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் சந்தேகநபரின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் போது மனைவிக்கு எழுதிவைத்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றியிருந்தனர்.
இந்த கடிதத்தில் தனக்கு திருமணத்திற்கு அப்பால் ஒரு உறவு காணப்பட்டதாகவும் அந்த உறவு காரணமாக பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் காவல்துறை பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குருவிட்ட, தெப்பனாவ பிரதேசத்தை சேர்ந்த திலிய யஷோமா ஜயசுந்தரி என்ற யுவதியே கொல்லப்பட்டிருந்தார். இந்நிலையில், உடலை அடையாளம் காண கொலை செய்யப்பட்ட யுவதியின் சகோதரர் இன்று கொழும்பிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி கடந்த 27 ஆம் திகதி புத்தள காவல் நிலையத்தில் இருந்து விடுப்பில் வந்து, அன்றிரவு இரவு 10.00 மணியளவில் யுவதியுடன் ஹன்வெல்லையில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விடுதியில் தங்கியிருந்தபோது, அவர் கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் மூன்று முறை வெளியே சென்றுள்ளார்.
இறுதியாக அவர் மார்ச் 1 ஆம் திகதி காலை 10 மணியளவில் விடுதியிலிருந்து வெளியேறினார். அதற்கு முன்பு அவர் ஹன்வெல்ல பகுதிக்கு சென்று ஒரு பயணப் பெட்டி மற்றும் கத்தியை வாங்கியிருந்தார்.
இது குறித்த காட்சிகள் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கெமராக்களில் பதிவாகியுள்ளது. இதன்படி, சிறப்பு பொலிஸ் குழு இன்று விடுதி அறையை ஆய்வு செய்தது.
கொலை செய்யப்பட்ட பின்னர் சந்தேக நபர் விடுதியில் தங்கியிருந்த அறையை முழுவதுமாக சுத்தம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், கொல்லப்பட்ட யுவதியின் தலையின் விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை எனவும், அது குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.





ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam
