இலங்கையில் சர்ச்சைகளையும் தாண்டி மாற்றத்தை ஏற்படுத்திய ரணில் - மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவேறுமா...
பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருந்த இலங்கை சற்று முன்னேற்றம் கண்டு வருவதாக பொருளியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த நாள் எப்படியிருக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருந்த நாட்டு மக்கள், தற்போது நிம்மதியாக மூச்சு விட வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் இவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக சமகால நிகழ்வுகள் புலப்படுத்துகின்றன.
அரசியல் மாற்றம்
ஜனாதிபதியாக ரணில் பதவியேற்றமை மற்றும் அதுசார்ந்த அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தாலும், மக்கள் சார்ந்த விடயங்கள் சாதக நிலைப்பாடுகளை தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவானார் ரணில்! |
சில வாரங்களுக்கு முன்னர் எரிபொருள், எரிவாயு, அத்தியாசிய உணவுப்பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. அதனை பெற்றுக்கொள்ளவும் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை காணப்பட்டது.
சில பகுதிகளில் எரிவாயுவை பெற மாதக்கணக்கிலும், எரிபொருளை பெற கிழமைக்கணக்கில் காத்திருந்தத சம்பவங்களும் பாதிவாகி இருந்தன. இதன்போது மரணங்களும் பதிவாகியிருந்தன.
எனினும் தற்போது அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் எரிவாயுவிற்கான நெருக்கடி நிலைமை தீர்க்கப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி
இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - சடுதியாக குறைந்த விலைகள் |
முன்னர் போன்று தேவையான நேரத்தில் எரிவாயுவை பெற்றுக்கொள்ள கூடிய நிலைமை வந்துள்ளது. இனிவரும் காலங்களில் எரிவாயுவிற்கான வரிசைகள் இருக்காது என லிற்றோ நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. பல மாதங்களுக்கு தேவையான எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறத்தில் எரிபொருளை பெற இரவு பகலாக காத்திருந்த மக்கள், அரசாங்கம் நடைமுறைப்படுத்திய புதிய நடைமுறையின் கீழ் அதனை இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பு உட்பட பல பகுதிகளில் எரிபொருளுக்கான நீண்ட வரிசை காணாமல் போயுள்ளது. தேசிய எரிபொருள் திட்டமான QR நடைமுறையின் கீழ் இலகுவாக எரிபொருள் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. எனினும் நிர்ணயிக்கப்பட்ட எரிபொருள் வழங்குவதால் சில தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாதகமான நிலைப்பாடு
நீண்டதூர பேருந்து சேவையில் ஈடுபடுவோர் தமக்கான எரிபொருள் கோட்டாவை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். எனினும் இது குறித்து சாதகமான முறையில் பரிசீலிப்பதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக விலையேற்றத்திற்கு மட்டுமே முகங்கொடுத்து வந்த நாட்டு மக்கள், இன்று விலை குறைப்பின் நலன்களை அனுபவிக்க தொடங்கியுள்ளனர்.
எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. எரிபொருளின் விலை குறைப்பு சிறியளவில் இருந்தாலும், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பெருமளவில் குறைந்துள்ளமை மக்களை நிம்மதி அடையச் செய்துள்ளது. இனிவரும் காலங்களில் மேலும் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வகட்சி அரசாங்கம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசி்யல் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீவிர முயற்சி எடுத்து வருவதாக நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். இதற்கு மக்கள் விடுதலை முன்னணி தவிர்ந்த ஏனைய அரசியல்கள் இணக்கம் வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் அடுத்து வரும் வாரங்களில் சர்வகட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. இதன்மூலம் வலுவான அரசாங்கம் ஒன்று நிறுவப்படும்.
அது சாத்தியமாகும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகளில் முன்னேற்றகரமான நிலை ஏற்பட்டு, 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனாக கிடைக்கும்.
சர்வதேச உதவிகள்
சர்வதேச நாணய நிதியம் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால், உலக வங்கி உட்பட பல சர்வதேச நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.
2024ஆம் ஆண்டில் இலங்கை வழமையான நிலைக்கு திரும்பும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.