அடுத்த மூன்று மாதங்களில் வைத்தியசாலை கட்டமைப்புக்கு ஏற்பட போகும் நிலை
வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துகள், சத்திர சிகிச்சை உபகரணங்கள், இரசாயனங்கள் இறக்குமதி செய்ய டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இதன் போது வைத்தியசாலைகளின் இந்த பிரச்சினை சம்பந்தமாக அமைச்சர்கள் இருவரும் உணர்வுபூர்வமாக கருத்து வெளியிட்டுள்ளதுடன் இந்த நிலைமையை நாட்டுக்கு கூறுவதை தவிர வேறு வழியில்லை என ஜனாதிபதி கூறியுள்ளதாக தெரியவருகிறது.
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் மருத்துவ உபகரணங்களுக்கு கடன் பத்திரங்களை வெளியிட தேவையான டொலர்களை விடுவிக்காது போனால், வைத்தியசாலை கட்டமைப்பு பாதிக்கப்படும் என கெஹெலிய மற்றும் சன்ன ஜயசுமண ஆகியோர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் அடுத்த மூன்று மாதங்களில் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு செயலிழந்து போகலாம் எனவும் கூறியுள்னர்.
கடந்த மூன்று மாதங்களாக மிகவும் சிரமமாக வைத்தியசாலை கட்டமைப்புகளை முகாமைத்துவம் செய்து வந்ததாகவும் மருத்துவத் துறையுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டொலர்களை கோரியுள்ளதால், தாம் கடும் அசௌகரியங்களை எதிர்நோக்கி இருப்பதாகவும் இவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.



