ஜெனீவாவில் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் தொடர்பில் ஆய்வு
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் இலங்கையைப் பற்றிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(26) ஒரு முக்கியமான ஆய்வாக நடைபெற்றது.
அது வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுத்துக் காக்கும் பன்னாட்டு உடன்படிக்கை தொடர்பான ஐ.நா. குழுவின் இலங்கை தொடர்பாக ஆய்வாகும்.
இலங்கை 2016 இல் இந்த உடன்படிக்கையில் இணைந்தது. ஆனால் 2018 இல் அளிக்க வேண்டிய அரசின் அறிக்கை 2023 இல் மட்டுமே கொடுக்கப்பட்டது.
விசாரணை அறிக்கைகள்
காணாமல் போனோரின் குடும்பங்களோடு கலந்து விசாரணை அறிக்கைகள் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காணாமல் போனோரின் மொத்த எண்ணிக்கையை சிறிலங்கா அரசு இன்றுவரை வெளிப்படுத்தவில்லை. பல்வேறு விசாரணைக் குழுமங்கள் ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் பெற்றும் தெளிவான முடிவுகள் எதுவும் இன்றுவரை எட்டப்படவில்லை.
30 இற்கும் மேற்பட்ட மாந்தர் பண்பாட்டிற்கே புறம்பான பெரும் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டும் வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் முன்னேறவில்லை.ஆட்சிகள், அரசுகள் மாறினாலும் காணாமல் போனோரின் குடும்பங்கள் தொடர்ந்து மிரட்டல், துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்றன.
இனம் கடந்து இலங்கையின் மூவின மக்களும் காணமல் ஆக்கப்பட்ட பேரிடரை எதிர்கொண்ட மக்களாக தமது பெருந்துன்பத்துடன் நீதிவேண்டி அறவழியில் போராடுகின்றார்கள்.
சிறிலங்காவின் அரச சட்டத்தரணி பொதுச்செயலகம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவினர் முறையிட்ட வழக்குகளை முன்னெடுக்காமல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை நீண்டகாலம் தொடர்வதாகவே தமிழ்மக்கள் இச்செயலை நோக்குகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெறும் பன்னாட்டு மன்றத்தின் (ஐ.நா) ஆய்வு, இலங்கையின் புதிய அரசுக்கு பழைய மறுப்பு உள்ளப்போக்கிலிருந்து விலகி, உண்மையை ஒப்புக்கொண்டு மாந்தர் பேரன்பு (மனிதநேய) அடிப்படையில் இடர்களுக்கு அறத்துடன் நீதி வழங்க வாய்ப்பளிக்கிறது.
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர்
இதனை புதிய சிறிலங்கா அரசு பயன்படுத்துமான என்பதும் ஐயமே?... ஒவ்வொரு காணாமற்போனவரும் ஒருவரின் மகன், மகள், கணவர் அல்லது மனைவியென நினைவூட்டும் வகையில், குடும்பங்களின் துயரங்கள் மீண்டும் ஜெனீவா மேடையில் வெளிப்படும் பொருட்டு இலங்கையில் இருந்து 7 அன்னையர்கள் ஜெனீவாவிற்கு வருகை அளித்துள்ளனர்.
இவர்களில் சிங்கள இனத்து அன்னையரும் உள்ளனர். ஈழத்திலும் இலங்கையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை இன்றுவரை தேடும் அறப்போராட்ட அன்னையர்கள் தமது சான்றுகளையும் வேண்டுகையினையும் உலகப்பொதுமன்றில் இக்காலத்தில் முன்வைக்கவுள்ளனர்.
இந்த அன்னையர்கள் இலங்கையில் இடம்பெற்ற பெரும்போர் காலத்திலும் மற்றும் அதற்கு பின்னரான காலத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களே.
2009 மே இறுதிக் கட்டப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் காணப்படுவதுடன், ஏனைய மாகாணங்களிலும் காணப்படுகின்றனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொடர் சுழற்சி முறையிலான போராட்டம் இன்றுவரை ஓய்வின்றி நடந்து வருகின்றது. இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் தமது உறவுகளைத் தேடும் அறப்போராட்ட அன்னையர் ஜெனீவா ஐ.நா மன்றத்திற்கு வருகை அளித்திருக்கும் வேளை கடந்த வியாழக்கிழமை (25) செந்தமிழ் திருமறையில் கருவறையில் தமிழ் வழிபாடு நோற்கும் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்திற்கு நவராத்திரி விழாக் காலத்தில் வருகை அளித்தனர்.
சைவநெறிக்கூடம்
சைவநெறிக்கூடம் அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் அன்னையற்கு மதிப்பளித்து இறைதிரு அருட்பொருட்களை வழங்கினர்.
சிவருசி தர்மலிங்கம் சசிக்குமார் தொடர்ந்து பேசுகையில் „அன்னையர்களது போராட்டம், இனத்தைக் கடந்து அறம் சார்ந்தது, இவர்களின் இழப்புக்களை எவராலும் இட்டு நிரப்ப முடியாது.
இழப்புக்களுக்கு நிகர்மை ஆற்றமுடியாது. அதேவேளை உறவுகளை தேடுபவர்கள் முன்னெடுக்கும் இப்போராட்டத்திற்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும்.
அன்னையர்கள் மேற்கொள்ளும் அறவழிப்போராட்டத்திற்கு சைவநெறிக்கூடம் என்றும் இசைவுடன் பக்கவலிமை சேர்க்கும் என்று உறுதி அளித்தார்.
சமயரீதியான ஆற்றுப்படுத்தல் செயலினையும் ஞானலிங்கேச்சுரர் திருக்கோவில் அருட்சுனையர்கள் ஆற்றினர். அன்னையர்களின் செயற்பாடுகளுக்கு துணைநிற்கும் திருவளர். லாவண்யா சின்னத்துரை மற்றும் திருவளர் துசாந்திக்கும் சைவநெறிக்கூடத்தின் சார்பில் நன்றி பகிரப்பட்டது.



