வடக்கு இளம் சமுதாயம் எது நோக்கி பயணிக்கிறது..!
முப்பது வருட கொடிய ஆயுதப் போராட்டம் அதனால் ஏற்பட்ட துன்பங்கள், இழப்புக்கள், அழுகைகள், அழிவுகள் எல்லாம் முடிந்து 16 வருடங்கள் கடந்து அடுத்த கட்ட நகர்வு நோக்கி நகர்கிறது இந்த நாடு.
தமக்கான தனித்துவ அடையாளங்களுடனும், கலாசார பண்பாடுகளுடனும் வாழ்ந்த தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக ஒரு தேசிய போராட்டத்தை ஜனநாயக மற்றும் ஆயுத வழியில் நடத்தி ஓய்ந்திருக்கின்றது.
ஆனால் தீர்வு தான் இன்னும் கிடைத்தபாடில்லை. புதிய அரசியலமைப்பின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என ஆட்சி மாற்றத்தின் போது தென்னிலங்கையின் தலைவர் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இனத்தின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்தி..
ஆனால் அதில் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் அவர்களுக்கான ஒரு நிரந்தர தீர்வு வருமா என்பதே மக்களின் ஆதங்கமாகவுள்ளது.
அது ஒரு புறம் மக்களின் ஏக்கங்களாக இருக்க மறுபுறம் வடக்கு கிழக்கில் ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், இளசுகளின் கருத்தரிப்பு வீதம் அதிகரிப்பு, அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை, வாள்வெட்டு கலாசாரம், போதைப் பொருள் கடத்தல், காதல் என்ற போர்வையில் சூறையாடப்படும் பெண்களின் கற்பு, கொலை, கொள்ளை என புதிய அசிங்கங்கள் அரங்கேறத் தொடங்கி விட்டன.
உரிமைக்காக போராடியவர்கள் இதனைத் தடுக்க போராட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் என்ன....? சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையா...? அல்லது திட்டமிட்ட அழிப்பா...? என சிந்திக்க வேண்டியுள்ளது.
ஒரு இனத்தின் இருப்புக்கு அதன் அடையாளங்களும், அதன் கலாசார பண்பாடுகளும் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
அதன் தளர்வு என்பது அந்த இனத்தின் தனித்துவத்தை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்து விடுகின்றது.
அந்தவகையில் வடக்கு இளைஞர், யுவதிகளின் போக்கானது தமிழ் தேசிய இனத்தின் இருப்பு குறித்த பலத்த கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.
நீதிமன்றங்களின் படிகளைத் தாண்டும் விவாகரத்துக்கள்
சுய ஒழுக்கத்துடனும் கட்டுப் கோப்புடனும் ஆண்களுக்கு நிகராக இருந்த சில பெண்கள் கூட இன்று சுய ஒழுக்கத்தை தவறியவர்களாக வலம் வரத் தொடங்கி விட்டார்கள்.
அரைகுறை ஆடைகளும், தியேட்டர்களில் கூடல்களும், விடுதிகளின் பரிணாமமும் பெண்களின் சுய ஒழுக்கத்தையே கேள்விக்குட்படுத்தி உள்ளது.
புள்ளிவிபரத்தின் அடிப்படையில் 13 தொடக்கம் 19 வயது வரையான பள்ளி பருவ இளம்பெண்கள் தவறான நடத்தைக்கு உட்படுத்துகின்ற வீதமும், அவர்களுக்கெதிரான துன்புறுத்தல்களும் அதிகம் என்றே கூறமுடியும்.
'கண்டதும் காதல்... கொண்டதும் கோலம்' என இன்று சீரழிகிறது இளம் சமூகம். இளவயது கர்ப்பங்களும், சட்டவிரோத கருக்கலைப்புக்களும், வீதியோரங்களில் வீசப்படும் பச்சிளங் குழந்தைகளும், நீதிமன்றங்களின் படிகளைத் தாண்டும் விவாகரத்துக்களும் இவற்றையே வெளிப்படுத்தி நிற்கின்றது.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன் என்று ஒரு கட்டமைப்புடனும், சுய ஒழுக்கத்துடனும், சுய கௌரவத்துடனும் வாழ்ந்த காலம் போய் இன்று சில பெண்கள் கட்டிய கணவன் இருக்க வேறு நபர்களுடன் கொள்ளும் தொடர்பும், நடந்து கொள்ளும் முறைகளும் முகம் சுழிக்க வைக்கிறது.
வெளிநாட்டுப் பணமும், மேலைத்தேய கலாசாரமும்
வெளிநாட்டுப் பணமும், மேலைத்தேய கலாசாரமும் இன்று எமது சமூகத்தில் புகுந்து குடும்பக் கட்டமைப்புக்களையே சிதைக்கத் தொடங்கியுள்ளது.
கட்டிய கணவன் வெளிநாட்டில் இருக்க பிள்ளைகளை பெற்றெடுக்கும் சில பெண்களையும் நாம் கண்டு கொண்டு தான் இருக்கின்றோம்.
இதற்கு காரணம் என்ன....?, திட்டமிடப்படாத திருமணங்களும், திருமணத்தின் பின் கணவனும், மனைவியும் நீண்டகாலம் தனிமையில் இருத்தல் என்பன குடும்பக் கட்டமைப்பில் நிலைகுலைவை ஏற்படுத்தி வருவதை மறுத்துவிடவும் முடியாது.
மறுபுறம் இளைஞர்களின் அட்டகாசம் வேறு. வெளிநாட்டுப் பணத்தில் சிட்டாக பறக்கும் மோட்டர் சைக்கிள். கையில் சுழலும் வாள்கள். பொக்கற்றுக்குள் சிகரட் பெட்டி. போதைக்கு மதுபானம் என அவர்களின் வாழ்க்கை அழிகிறது.
பாடசாலை சென்று கற்கும் மாணவர்கள் கூட மாவா பாவித்தல், போதைப் பொருள் பாவித்தல், வாள்வெட்டுக்களில் ஈடுபடுதல் என நாளாந்த பத்திரிக்கைச் செய்திகள் ஆகிவிட்டன.
என்ன தான் மதுபானத்தின் விலையை அரசாங்கம் கூட்டடினாலும் அதனை பயன்படுத்துவோரை கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கிறது. இதை தடுப்பது எப்படி...?
நாட்டு நலனுக்காக வந்த சட்டங்கள்
பாடசாலைகளில் தவறு செய்யும் மாணவர்களை தண்டிக்க முடியாத நிலையில் ஆசிரியர்களின் கரங்களை சட்டம் கட்டுப் போட்டு வைக்க, மறுபுறம் தமது பிள்ளைகளையே கட்டுப்படுத்த முடியாத பரிதாப நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
தெறிக்க விடும் இவர்களை கட்டுப்படுத்துவது யார்...?, நாட்டு நலனுக்காக வந்த சட்டங்கள் கூட இன்று தப்பைத் தட்டிக் கேட்க முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. அ
சூர வேகத்தில் பரவும் மதுபானசாலைகள், போதைப் பொருள் விற்பனை நிலையங்கள் என்பன இளசுகளின் கூடாரங்களாக மாறிவிடுகின்றன.
பாடசாலை முடிந்ததும் ரியூட்டறி கொட்டில்களில் கூடிய இளைஞர்கள் இன்று மதுபான சாலைகளிலும், சந்திகளிலும் கூடும் நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
தமிழரின் கலாசார அடையாளமாக விளங்கிய யாழ்ப்பாணம் இன்று வாள்வெட்டு பூமியாக மாறியுள்ளது.
இளைஞர்களின் எதிர்காலமே கேள்விக்குறி
வடக்கு, கிழக்கில் பல மாணவர்கள் பாடசாலையில் இருந்து இடை விலகிறார்கள். காரணம் அடிதடி, போதைப் பொருள் பாவனை. தட்டிக் கேட்க முடியாத நிலையால் பாடசாலை சமூகம் அவர்களை இடைநிறுத்த வேண்டிய துர்ப்பாக்கியத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது.
இதனால் அந்த இளைஞர்களின் எதிர்காலம் வீதிகளில் கழிகிறது. அவர்களுக்கான மறுவாழ்வு என்பது கேள்வியே.
இதை எப்படி சொல்வது...? விதி என்பதா...? அல்லது சதியென்பதா...? வடக்கிற்கு வரும் கேரளா கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது.
இந்த விநியோக நடவடிக்கையில் வடக்கு இளைஞர்களும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் சிலர் தப்பிச் செல்ல பலர் பொலிஸாரிடம் அகப்படுகின்றனர்.
அதன்பின் வழக்கு விசாரணை, கஞ்சா கடத்தல்காரன் என்ற பெயருடன் அந்த இளைஞர்களின் எதிர்காலமே கேள்வியாக அமைந்து விடுகின்றது.
இன்று வழிப்பறி கொள்ளைக் கூட்டமாக எமது இளைஞர்கள் சில இடங்களில் மாறிவருவதைக் கூட கண்டுகொள்ள முடிகிறது. போதைப்பொருள் வாங்க பணம் பறிக்கும் கும்பல்கள், அதற்காக கொள்ளைகள் என்பனவும் தற்போது அரங்கேறத் தொடங்கிவிட்டது.
இதை யார் கற்றுக் கொடுத்தது...? எப்படி இது எமக்குள் புகுந்தது...? இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். ஆனால் இன்று கலாசாரத்தின் ஆணிவேரே ஆட்டம் கண்டிருக்கின்றது.
அப்படி எனில் நாளை...? எமக்கு என்று ஒரு கலாசாரம் இருக்குமா....? இவற்றை எண்ணுகின்ற போது 2009 ஆம் ஆண்டு முள்ளியவாய்காலில் மரணித்தது உரிமைக்கான ஆயுதப் போரட்டம் மட்டுமல்ல தமிழரின் கலாசார பண்பாடுகளும் தானா...? என்ற ஏக்கமே இன்று எழுக்கின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Thileepan அவரால் எழுதப்பட்டு, 04 March, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

அமெரிக்காவின் அதிர்ச்சி முடிவு: உக்ரைனுக்கான ஆயுத உதவி நிறுத்தம்! ஐரோப்பிய நாடுகளின் ஆதரவு தொடருமா? News Lankasri
