இரண்டு ஆண்டுகளில் என்ன செய்தோம்! எதிர்க்கட்சிக்கு ஆளும் தரப்பின் அதிரடி பதில்
“இரண்டு வருடங்களில் இந்த அரசாங்கம் என்ன செய்தது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கிறார்கள். அதற்கு எமது பதில், 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வங்குரோத்து நிலைக்குச் சென்று உலக நாடுகளால் பேசப்பட்ட இலங்கை, இன்று வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளமைதான்” என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணகலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்று நேற்று (27) டயகம பகுதியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மக்களின் வரிப்பணம்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை வளமான நாடாக மாற்றுவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரசியல் என்பது ஒரு “திருட்டுக் குகையாக” பயன்படுத்தப்பட்டதாகவும், மக்களின் வரிப்பணம் மற்றும் உழைப்பை சுரண்டியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, மக்களுக்கு வெளிப்படுத்துவோம் என்பதே தேசிய மக்கள் சக்தி வழங்கிய வாக்குறுதி எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகள், சாதாரண மக்கள் அல்லது அரச அதிகாரிகள் என யாராக இருந்தாலும், மக்கள் பணத்தை முறைகேடாக பயன்படுத்தியவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தலவாக்கலை மற்றும் நோர்வூட் பிரதேச செயலகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மலையக மக்கள் தற்போது புரிந்துகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
நாட்டில் மக்களுக்கு காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அபிவிருத்திப் பணிகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிருஷ்ணகலைச்செல்வி தெரிவித்தார்.
கொழும்பு மத்திய பேருந்து நிலையம் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், மெட்ரோ பேருந்து சேவையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் போக்குவரத்துத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கு ஏற்ப போக்குவரத்து அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான பல்வேறு வேலைத்திட்டங்களும் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள், தோட்டக் கமிட்டித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.