இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்! முன்னாள் பிரதமர் ரணிலின் விசேட அறிவிப்பு
பிரஜைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிற்கு தீர்வு எதுவும் காணப்படாததால் நேற்றிரவு மிரிஹான பங்கிரிவத்தை ஆர்ப்பாட்டம் வெடித்தது. தற்போதைய அரசியல் கட்டமைப்பின் வீழ்ச்சியே இந்த சம்பவத்திற்கு காரணம் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும், மிரிஹானவில் இடம்பெற்றது இனவாத சம்பவமில்லை, இது பயங்கரவாத சம்பவமில்லை. அவ்வாறான இனவாத கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,
இலங்கை பிரஜைகளை வாட்டும் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது. எதிர்கட்சியும் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியுள்ளது. அரசாங்கம் இந்த சம்பவங்களிற்கு பல தரப்பட்ட குழுக்கள்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது, ஆனால் அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான ஆதாரங்களை முன்வைக்கவேண்டும்.
அரசாங்கம் இனவாத கருத்துக்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும், அதேவேளை யார் இந்த வன்முறைகளிற்கு காரணம் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இது இனவாத சம்பவமில்லை, இது பயங்கரவாத சம்பவமில்லை, அவ்வாறான விதத்தில் கருத்துக்களை தெரிவிப்பது ஏற்கனவே காணப்படும் நிலையை மேலும் தீவிரப்படுத்தும்.
யூப்பிளி போஸ்டில் அமைதியான விதத்திலேயே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன ஆனால் பங்கிரிமாவத்தையில் அந்த நிலை மாற்றமடைந்தது.
நான் இது குறித்து மாறுபட்ட கருத்துக்களை தெரிவிக்கின்றேன், அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக எவரையும் காயப்படுத்தக்கூடாது-மக்களிற்கு அமைதியாகவும் சுதந்திரமாகவும் போராட உரிமையுண்டு, பொதுமக்களின் ஆர்ப்பாட்டங்களில் அரசியல் கட்சிகள் பங்கெடுக்ககூடாது. ஆனால் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும்நடத்துவதற்கான உரிமையுண்டு.
தாமதமாகிவிட்டபோதிலும் நாடாளுமன்றத்திற்கும் கடப்பாடு உள்ளது,பொதுமக்களிற்கு தீர்வை வழங்ககூடிய தீர்வுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும், இந்த நெருக்கடிக்கு வன்முறைகள் இன்றி தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று இரவு மின்துண்டிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, விலையேற்றம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்ததுடன் அப்பகுதி பெரும் யுத்தக் களமாக காட்சியளித்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், நிலைமை கைமீறி செல்லவே கொழும்பு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டது.
அத்துடன், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் இதுவரை நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நேற்றையதினம் இரவு இடம்பெற்ற சம்பவம் பயங்கரவாத குழவினரால் ஒழுங்கமைக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.