கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாக்க என்ன செய்யவேண்டும்..?
அதிகரித்துவரும் கொரோனா தாக்கத்தால் சமீப நாட்களாக பிரித்தானியாவில் இலங்கைத் தமிழர்கள் பலர் உயிரிழந்துவருகின்றனர் என்ற பேச்சு நம்மிடையே கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
முதலில் இறந்தவர்களுக்கு ஆத்மசாந்தியடையட்டும் என மனதார வேண்டிக்கொள்வதோடு இக்கட்டுரைக்குள் செல்லலாம்.
ஆம், பிரித்தானியாவில் அதிகமான தமிழர்கள் வாழ்ந்துவரும் நிலையில் அண்மை நாட்களில் எண்ணிலடங்கா பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதோடு, பலர் உயிரிழந்துகொண்டிருந்தாலும், நம்மில் பலர் மனதளவிலும் பாதிப்படைந்து வருவதை உணரமுடிகின்றது.
கொரோனா மத்தியிலும் நாம் வேலைக்கு சென்றாலும், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஊடகவாயிலூடாக வரும் பல்தரப்பட்ட செய்திகளைப் பார்த்தும், நம்மிடையே உலாவும் பேச்சுக்களாலும் சற்று மனம் தளர்ச்சியுற்று பயப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. பலர் இதனை வெளிப்படுத்தாவிடினும் இதுதான் தற்போதைய யதார்த்தம்.
மனிதன் ஒவ்வொரு பேரிடரின் போதும் தத்தம் உறவுகளை, உடைமைகளை, வாழ்விடங்களை, வாழ்வாதாராங்களை இழப்பது மட்டுமன்றி மனதளவிலும் மிகவும் பாதிப்படைவது வழக்கமே. அதுபோன்ற நிலைமையைக் கூட கடந்துவிடலாம், ஆனால் இப்போதைய கொரோனா சூழ்நிலையில் பிரித்தானிய தமிழர்களின் மனநிலை இன்னும் மோசமானதாக உள்ளது. ஏனெனில் கண்ணுக்கு தெரியாத கொடிய கொரோனாவுக்கு இலக்காகி விடக்கூடாதென்பதே.
இலங்கையில் நாம் எதிர்கொண்ட யுத்தம் போன்றது இது இல்லையே. சத்தமின்றி நமக்குத் தெரியாமலே நம்மைத் தாக்கி கொஞ்சம் கொஞ்சமாக நம்மைக் கொல்லும் வியாதி மட்டுமன்றி நம்மைச் சுற்றியுள்ளோரையும் நம்மாலேயே தாக்க வைக்கும் கொடிய கிருமியாக உள்ளதே. அதனாலேயே நாம் மேலும் அதிகமாக பயப்படவேண்டி இருக்கின்றது.
வெளியில் போய்விட்டு வீட்டுக்கு வரும் உறவுகளாலேயே கொரோனா வீட்டுக்குள் குடிவந்துவிடுமோ என்ற மாபெரும் அச்சம் நம்மிடையே நம் மனதளவில் ஆட்கொண்டுவிட்டுள்ளது.
மனிதனின் சக்திக்கும் எட்டாத ஒரு நுண்ணுயிரி நம்மை ஆட்டிவைக்கின்றது எனில் நம்மில் எவ்வளவு பேர் பயப்படாமல் வாழ முடியும்.
உலகத்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், ஆய்வாளர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள்..... ஏன் ஒருபடிமேல் போய் கடவுளாலேயே இக் கொடிய வைரஸ் ஐ கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டதே என எண்ணுகையில் நம்மில் எத்தனை பேருக்கு தான் பயம் வராது.
பிரித்தானிய வாழ் எம்மினம் அநேகமானோர் ஏதோ ஒருவித பயத்தை மனதில் இருத்தித்தான், ஒவ்வொரு நாட்களையும், ஒவ்வொரு நிமிடங்களையும் கடப்பதோடு, ``அடுத்து என்ன நடக்கும், நம்மில் யாருக்கு நடக்கும், வெளியில் செல்லும் கணவனாலா, வெளியில் செல்லும் மகனாலா, இல்லை மகள் மூலமா, அப்பா மூலம் பரவுமா, அம்மாதான் கொரோனா காவியா, இல்லை கடையில் வாங்கி வந்த உணவாலா, இல்லை பொருட்களாலா என எண்ணி எண்ணியே`` ஒவ்வொருவரையும் சாகடிக்கின்றது என்பது யாராலும் மறுக்கமுடியாத உண்மை.
இருப்பினும் நமக்கென்ன, நாம் சந்திக்காத கஸ்டங்களா என நம்மில் சிலர் இறுமாப்போடு உலாவத்தான் செய்கின்றனர்.
பிரித்தானியாவில் வேற்றினத்தவர்களை விட சிறுபான்மையினருக்கே கொரோனா பாதிப்பு அதிகம் என கடந்த பல மாதங்களாக வெளிவந்த புள்ளி விபரங்கள் தெரிவித்திருந்தாலும், தற்போது நம்மின சொந்தங்கள் பலரின் உயிரிழப்புக்கள் அத்தரவையும் நம்ப வைக்கின்றது அல்லவா.
சிறுபான்மை இனம் எனவோ, கறுப்பினம் எனவோ ஊடகங்களில் வரும் சொற்பதங்கள் கறுப்பினத்தவரை என நம்மில் சிலர் எண்ணக்கூடும். அவ்வினத்துள் தான் இலங்கையர்களும் அடங்குகின்றனர் என்பதனை மறந்துவிடாதீர்கள்.
நம்மில் பலரை கொரோனா உயிரெடுத்துவிட்டது, பலரை ஆட்கொண்டுவருகின்றது, பலரை எப்போது ஆட்கொள்ளலாம் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. தற்போதைய சூழ்நிலையில் பிரித்தானிய மருத்துவமனைகளில் இடமின்றி இருப்பதனால் நம்மில் தொற்றுக்குள்ளான பலர் வீட்டிலேயே இருப்பதனால் உயிரிழப்புக்களும் அதிகரிக்கின்றன.
எனவே நம்மின சொந்தங்களே, உங்களையும் பாதுகாத்து, ஏனையோரையும் கொடிய தொற்றிலிருந்து காப்பது மட்டுமன்றி, வீட்டில் மன உளைச்சலுக்குள்ளாவோரையும் ஆற்றுதல் படுத்துங்கள். இதுவே நம்மிடையே உள்ள முதலுதவி.
இதனை எதிர்க்க என்ன செய்யலாம், எப்படி நடைமுறைப்படுத்தலாம் எவ்வாறு செயற்படலாம் என சிந்தியுங்கள்.
கடைகளுக்கு செல்கையில் பாதுகாப்போடு அதாவது முகக்கவசம் போட்டு செல்லுங்கள்.
முடிந்தளவு மற்றவர்களிடையே இடைவெளியைக் கடைப்பிடியுங்கள்.
கைகளை நன்கு கழுவிக்கொள்ளுங்கள்
முடிந்தளவு வீட்டிலேயே உணவுகளை அன்றன்றைக்கு சமைத்து உண்ணுங்கள்.
புளிக்க வைத்த சாப்பாட்டை உண்ணாதீர்கள். மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடாதீர்கள்.
மது அருந்துவதையோ, புகைப்பிடிப்பதையோ குறைத்துக் கொள்ளுங்கள்,
காய்கறி, இறைச்சி, மீன் வகைகளை நன்கு கழுவி, நன்கு வேக வைத்து சாப்பிடுங்கள். அரை அவியலைத் தவிருங்கள்.
சத்தமாக கதைத்து எச்சிலூடாக கொரோனாவை பரப்பாது எப்போதும் சுத்தமாக இருங்கள்.
கடைகள், வணக்கஸ்தலங்கள், பொதுப்போக்குவரத்தில் பயணங்கள் என பல்லிடங்களுக்கு சென்றுவரும்பட்சத்தில் கைகளை நன்கு கழுவிக் கொள்ளுங்கள்.
எப்போது கொரோனா முடியும் என ஆராய்வதை விடுத்து தற்போது உலாவிக்கொண்டிருக்கும் கொடிய கொரொனாவிலிருந்து எப்படி தற்பாதுகாத்துக்கொள்ளலாம் என சிந்தியுங்கள். பயத்தை உருவாக்காமல் எவ்வாறு தப்பித்துக்கொள்ளலாம் என்ற மனப்பக்குவத்தை உருவாக்குங்கள்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பக்கவிளைவுகள் வந்துவிடுமோ என்ற குறுகிய சிந்தனையை வளர்த்து மனதளவில் பயந்து பயந்து சாவதைவிட, தடுப்பூசி தேவைப்படின் அதனைப் போட்டுக்கொள்ளுதல் சிறந்ததே.
வந்தபின் கவலைப்படுவதை விட வரும்முன் காப்பதும் புத்திசாலித்தனம்.
2024ம் ஆண்டளவில் தான் விமான பயணங்கள் இயல்புநிலைக்கு வரும் என சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் தெரிவித்ததுபோன்று, 2024ம் ஆண்டு வரைக்கும் கொரோனா பாதிப்பு இருக்குமோ என்னவோ.
எனவே நம் அன்புக்கினிய சொந்தங்களே கவனமாக பாதுகாப்போடு இருங்கள்.
முடிவில்லாத் தொடர்ந்து செல்லும் இக் கொடிய பேரிடர், எப்போது, எவ்விதம் முடிவுக்கு வருமோ யாமறியோம்...!