ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து மேற்குலகம் ஆராய்வு
ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஷ்யாவை எதிர்ப்பவர்களுக்கு ஆயுதங்களை வழங்க மேற்குலகம் தீர்மானித்துள்ளது என அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செனெட்டர்களிற்கு மேலும் தெரிவிக்கையில்,
ரஷ்யா தற்போதைய உக்ரைன் அரசாங்கத்தைக் கவிழ்த்தால் அது கடும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் என மேற்குலகம் கருத்தும் நிலையில் ரஷ்யாவை எதிர்ப்பவர்களிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.
தேசிய சுயநிர்ணய உரிமை கோட்பாடுகளை அழிக்கும் ரஷ்யாவின் வெற்றியை நாங்கள் எதிர்கொள்ளமாட்டோம். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களிற்கு ஆயுதங்களை வழங்குவோம்.
இதேவேளை மியுனிச் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய பிரிட்டனின் பிரதமர் பொறிஸ்ஜோன்சன் ரஷ்யாவின் நடவடிக்கை தோல்வியில் முடிவடைவதை உறுதி செய்யவேண்டியது அனைவரினதும் கூட்டு நன்மையுடன் தொடர்புபட்ட விடயம் என தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் படை நடவடிக்கை தசாப்த கால இரத்தக்களறிக்கும் துயரத்திற்கும் வழிவகுக்கும் உக்ரைனியர்கள் ரஷ்யாவைக் கடுமையாக எதிர்ப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.