இலங்கையில் வானிலை குறித்த முன்னறிவிப்புக்களில் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை
இலங்கையின் தென்கிழக்கில் குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்ப நிலை உருவாகக்கூடும்.
எனவே, எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளில் பொது மக்கள் கவனமாக இருக்குமாறு, இலங்கையின் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும்.
மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
இதேவேளை இந்தியாவில் குலாப் புயல் நாளை மற்றொரு புயலாக உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ‘குலாப்’ புயல், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையை கடந்தது.
இதைத்தொடர்ந்து அது பலவீனம் அடைந்து குறைந்த காற்றழுத்த பகுதியாக தெற்கு குஜராத் பிராந்தியத்தில் நேற்று நிலை கொண்டது.
இந்தநிலையில் மேற்கு-வடமேற்காக நகர்ந்து, இன்று அது, அரபிக்கடலுக்குள் நுழைகிறது.
அத்துடன், மேலும் தீவிரமடைந்து நாளை மற்றொரு புயலாக உருவெடுக்கிறது.
தொடர்ந்து, மேற்கு-வடமேற்காக பாகிஸ்தானை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.