இலங்கைக்கு அச்சுறுத்தலாக உருவான புயல் நகர்வு! வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இலங்கையின் வடகிழக்கே வங்காள விரிகுடாவில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, தீவிலிருந்து மேலும் விலகிச் செல்வதாகவும், நவம்பர் 17ஆம் திகதிக்குள் கடுமையான புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை (16.11.2026) வெளியிடப்பட்ட சமீபத்திய வானிலை அறிக்கையின்படி, காற்றழுத்தத் தாழ்வுநிலை திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 620 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.
இது இன்று மாலைக்குள் தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் புயலாக வலுப்பெறும் என்றும், பின்னர் நவம்பர் 17-ஆம் திகதிக்குள் மேற்கு-மத்திய வங்காள விரிகுடாப் பகுதிகளில் கடுமையான புயலாக மேலும் வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இதற்கிடையில், மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல கட்டங்களாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற்பகல் 2.00 மணிக்கு மேல் ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அதே நேரத்தில் இலங்கையின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழையின் போது, குறிப்பிட்ட பகுதிகளில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னலுக்கு எதிராக உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.