கிண்ணியாவில் குழியொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள்
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்காடு, சாவாறு பகுதியில் இன்று (டிசம்பர் 4) வெள்ள நீரால் ஏற்பட்ட குழியிலிருந்து பெருமளவிலான வெடி பொருட்களும், துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் வடிந்த நிலையில், கால்நடை வளர்ப்போர் சாவாறு பகுதிக்குச் சென்றபோது, இந்த வெடிப்பொருட்களை கண்டு தகவல் அளித்துள்ளனர்.
இந்த தகவலின் பேரில், பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கை குண்டுகள் செயலிழப்பு
இதன்போது, கை குண்டுகள்109 , துப்பாக்கி ரவைகள் 1678 மீட்கப்பட்டு திருகோணமலை விசேட அதிரடிப்படையினரால் (STF) வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே செயலிழக்க செய்யப்பட்டுள்ளன.

"வெள்ள நீரின் அதிகரித்த ஓட்டத்தால் ஏற்பட்ட பாரிய குழியொன்றிலிருந்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கண்டல்காடு, சாவாறு பிரதேசம் முன்னர் விடுதலைப்புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருந்து விடுவிக்கப்பட்ட ஒரு பகுதியாகும்.
பொலிஸார் சந்தேகம்
இதன் காரணமாக, இந்த ஆயுதங்கள் அவர்களால் புதைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக சம்பவம் குறித்துக் கருத்து தெரிவித்த கிண்ணியா பொலிஸ் பொறுப்பு அதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான N. G. K. பெர்னான்டோ தெரிவித்தார்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ள நீரோட்டம், புதைக்கப்பட்டிருந்த இந்த ஆயுதங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றது," எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

