இலங்கையில் நெகிழ்ச்சி செயல் - வறுமையிலும் நேர்மையில் உச்சம் தொட்ட மூதாட்டி
தென்னிலங்கையில் அதிர்ஷ்டலாபசீட்டு விற்பனை செய்யும் ஏழை தாயின் நேர்மை, இன்று நாடு முழுவதும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
களுத்துறை, புளத்சிங்கள பகுதியை சேர்ந்த 70 வயதுடைய கீதா காந்தி கோட்டகொட என்ற பெண்ணின் செயற்பாடு சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
குறித்த பெண் 20 ஆண்டுகளாக லொத்தர் சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். முன்பு தேநீர்க்கடை நடத்தி வந்த அவர், போக்குவரத்து மாற்றங்களினால் வாழ்வாதாரத்தை இழந்து, இன்று வீதியோரத்தில் லொத்தர் சீட்டு விற்பனை செய்து வருகிறார்.
சீட்டுக்களை கொள்வனவு செய்து விற்பனை
நாளாந்தம் முகவர் நிலையத்தில் இருந்து சீட்டுக்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து வருகிறார். அவ்வாறு விற்கப்படாத சீட்டுக்களைத் திருப்பி ஒப்படைக்க முடியாது. இதனால் ஏற்படும் நஷ்டத்தை அவரே ஏற்க வேண்டும்.

இந்நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக மோல்காவ பிரதேசத்தைச் சேர்ந்த லலித் பின்னகொட என்ற இளைஞன், வயதான பெண்ணிக்கு உதவும் நோக்கில் அவரிடம் மிஞ்சும் அனைத்து லொத்தர் சீட்டுக்களையும் தினமும் விலை கொடுத்து கொள்வனவு செய்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை, விற்பனை செய்யப்படாத எஞ்சியிருந்த 50 சீட்டுக்களை வாங்குவதாக லலித் உறுதியளித்திருந்தார்.
இரவு குலுக்கல் முடிவுகள் வெளியானபோது, அந்த 50 சீட்டுக்களில் ஒரு சீட்டிற்கு இரண்டு இலட்சம் ரூபாய் பரிசு விழுந்திருப்பதை கீதா அறிந்து கொண்டார்.
லொத்தர் சீட்டு
இந்நிலையில் அடுத்தநாள் காலையில் கடைக்கு வந்த, தனக்கு உதவும் இளைஞனுக்கு பரிசு கிடைத்திருப்பதை அறிவித்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் லொத்தர் சீட்டுகளை விற்பனை செய்து வரும் குறித்த பெண், நேர்மையாக இளைஞனிடம் லொத்தர் சீட்டினை வழங்கியுள்ளார்.
கீதா பாட்டியின் நேர்மையைக் கண்டு வியந்த லலித், தனக்குக் கிடைத்த இரண்டு இலட்சம் ரூபாய் பரிசில் 50,000 ரூபாயை அந்த இடத்திலேயே வயதான பெண்ணுக்கு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.