போக வேண்டிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்..! அநுர அரசை விளாசித் தள்ளிய நாமல் எம்.பி
ஆட்சிக்கு வரும்போது எங்களைத் தயாராக இருக்குமாறு கூறினீர்கள். இப்போது நீங்களும் தயாராக இருங்கள். போகும் இடத்தைக் காட்டுகின்றோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச விளாசித் தள்ளியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(23) நடைபெற்ற வேலையாட்களின் வரவு - செலவுத் திட்ட நிவாரணப்படி திருத்தச் சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் தேசிய குறைந்தபட்ச வேதனத் திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
சம்பளம் அதிகரிக்கப்பட்டமையால்
மேலும் உரையாற்றுகையில், "தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் 15 வருடங்களுக்கு முன்னர் கூறியவற்றை இப்போதும் தெரிவித்து வருகின்றனர்.
ஆட்சிக்கு வந்த பின்னரும் அதே பொய்களைக் கூறுகின்றனர்.
சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கூறுகின்றீர்கள். அது நல்ல விடயம். ஆனால், சம்பளத்தை அதிகரித்து அந்தச் சம்பளத்துக்கு நிகராக வரியை அறவிட்டு மீண்டும் அரசுக்குப் பெற்றுக் கொள்கின்றீர்கள்.
இதனால் சம்பளம் அதிகரிக்கப்பட்டமையின் நன்மை ஊழியருக்குக் கிடைக்கின்றதா? அவ்வாறு இல்லை. வரிக் கொள்கைக்கு அமைய அதிகரிக்கப்பட்ட சம்பளத்தில் பெருமளவு தொகையை அரசு பெற்றுக்கொள்கின்றது.
முதலாளிகளின் அரசாக
ஆட்சிக்கு வர முன்னர் ஒரே கையெழுத்தில் செய்துவிடுவோம் என்று கூறினீர்கள். ஆனால், அது இலகுவான விடயம் அல்ல என்பது இப்போது புரிந்திருக்கும்.
இப்போது சகல அரச நிறுவனங்களிலும் பழிவாங்கல்கள் இடம்பெறுகின்றன. தொழிற்சங்கங்கள் ஒடுக்கப்படுகின்றன.
தொழிற்சங்கங்களை நீங்களே வழிநடத்தினீர்கள். ஆசிரியர் சங்கத்தினர் பாடசாலைக்குச் செல்லாமல் அதில் இருந்தனர். இப்போது தொழிற்சங்கங்களைக் கைவிட்டு, இடமாற்றங்களைச் செய்து அரச சேவையை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று கூறுகின்றீர்கள்.
உங்கள் அரசியல் தலையீடுகள் தொடர்பில் கதைக்காது அரச அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றீர்கள்.
ஆனால், அரச துறையை இல்லாமல் செய்துவிட வேண்டாம். சிறியவர்களின் அரசு இப்போது முதலாளிகளின் அரசாக மாறியுள்ளது.
அவர்களிடம் கேட்டுத்தான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. கோடீஸ்வர வர்த்தகர்களிடம் கேட்டுத்தான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இதனை விடுத்து சாதாரண மக்களிடம் கேட்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




