உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்!
தமிழ் அரசியல் சூழலில் பேசப்படும் விடயங்களில் எதை நோக்கி எழுதினால் பயனுண்டு? எழுதுவதற்காக அமர்ந்தவுடன் முதலில் இந்தக் கேள்விதான் எழுவதுண்டு. நமது எழுத்துக்கள் அரசியல்ரீதியில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று இனியும் சிறுபிள்ளைத்தனமாக நம்பிக் கொண்டிருந்தால் அது மடைமை. – அப்படியாயின் ஏன் எழுத வேண்டும்?
ஆகக் குறைந்தது பொய்களையும் உண்மைகளையும் பிரித்து பார்க்க முற்படுபவர்களுக்கு எனது எழுத்துக்கள் ஒரு வேளை உதவலாம். இந்த அடிப்படையில் தமிழர் அரசியலில் கடிதம் எழுதும் விடயம் பற்றிப் பார்ப்போம். கடிதம் எழுதும் விடயத்தை இன்றைய உலக அரசியலோடு பொருத்தி, ஆராய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம் மற்றும்படி கடிதம் எழுதுவதை ஊக்குவிப்பதோ அல்லது இவ்வாறான கடிதங்களால் அதிசயங்கள் நிகழுமென்று மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டுவதோ அல்ல.
மாறாக, உண்மைகளைச் சொல்வது. அந்த உண்மைகள் ஒரு சிலரையாவது சிந்திக்கத் தூண்டுமானால், அதுதான் இவ்வாறான எழுத்துக்களின் பயனாக இருக்க முடியும்.
கடிதம் எழுதும் அரசியல் என்பது ஒரு அண்மைக்கால கண்டுபிடிப்பாகும். எனது அவதானத்திற்கு எட்டியவரையில், ஒரு இயக்கம் இன்னொரு நாட்டை நோக்கி கடிதம் எழுதியது என்றால் அது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமாகத்தான் இருக்க முடியும். இது பற்றி அன்ரன் பாலசிங்கம் தனது போரும் சமாதானமும் நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
நீதிக்கான கோரிக்கை
தமிழ் ஆயுத இயக்கங்களுக்கான இந்தியாவின் பயிற்சித் திட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளையும் இணைத்துக் கொள்ளுமாறு கோரி, தான் கடிதம் எழுதியதாக பாலசிங்கம் எழுதியிருக்கின்றார்.
வன்னிக் காட்டில் இருந்த பிரபாகரனின் உத்தரவுக்கமைவாக தான் அப்போது இந்திராகாந்திக்கும், இந்திய உளவுத்துறையான றோவின் தலைவராக இருந்த சக்சேனாவிற்கு கடிதம் எழுதியதாகவும், அதனைத் தொடர்ந்தே இந்திய உளவுத்துறை தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் பயிற்சித் திட்டத்தில் இணைத்துக் கொண்டதாகவும் பாலசிங்கம் குறிப்பிட்டிருக்கின்றார்.
இந்த அடிப்படையில் நோக்கினால் பாலசிங்கத்தின் கடிதத்தைத்தான் ஒரு வெளிநாட்டு தலைவருக்கான முதல் கடிதமாகக் குறிப்பிட முடியும் - அது உண்மையாக இருந்தால். 2009இற்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழர் அரசியல் நீதிக்கான கோரிக்கைகளாகவும் மனித உரிமைக்கான குரலாகவும் மாற்றம் கண்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியலை தீர்மானித்த காலத்தில் அதே போன்று பல தமிழ் இயக்கங்கள் இயங்கிய காலத்தில் மனித உரிமை என்னும் சொல்லை யாரேனும் உச்சரித்ததாக பதிவுகள் இல்லை – மேலும் மனித உரிமை என்னும் சொல்லை உச்சரிப்பதற்கான தகுதியுடனும் எந்தவொரு இயக்கமும் இருந்திருக்கவும் இல்லை.
அடிப்படையில் மனித உரிமை, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி என்னும் கோரிக்கைகள் அனைத்துமே, 2009இற்கு பின்னரான அல்லது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோல்விக்கு பின்னரான கோசங்களாகும். இந்தப் பின்புலத்தில்தான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதும் விடயமொன்று தமிழர் அரசியலில் தலைநீட்டியது.
பின்னர் யார் சரியாக கடிதம் எழுதுகின்றனர் - நாங்கள் இனப்படுகொலையை வலியுறுத்தினோம் - அவர்கள் வலியுறுத்தவில்லை – சிலர் அரசாங்கத்தை காப்பாற்ற முயற்சிக்கின்றனர் என்றெல்லாம் கட்சிகளின் தலைவர்களும் தொண்டர்களும் தங்களுக்குள் முட்டி மோதிக் கொண்டனர். மக்கள் வழமைபோல் வேடிக்கை பார்த்தனர்.
சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் தங்களின் பங்கிற்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அண்மையிலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனைத்து கட்சிகளையும் இணைத்து கடிதம் எழுதுவது பற்றிப் பேசியிருந்தார்.
கடிதம் எழுதுவதற்கும் உலக அரசியலை புரிந்து கொள்வதற்கும் ஒரு தொடர்புண்டு. நாங்கள் ஏன் கடிதம் எழுத முற்படுகின்றோம்? - எங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பவர், எங்கள் மீது பரிவு காண்பிப்பார், எங்களை திரும்பிப்பார்ப்பார் என்னும் எதிர்பார்ப்பில்தானே கடிதம் எழுதப்படுகின்றது.
ஆனால் நீங்கள் கடிதம் எழுதுவரின் நிலையோ மிகவும் பரிதாமாக இருக்கின்ற போது அவரால் எவ்வாறு உதவ முடியும்? இதுவரையில் தமிழ் கட்சிகள் யாரை நோக்கி கடிதம் எழுதியிருக்கின்றன. அதிகமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரை நோக்கித்தான் கடிதங்கள் சென்றிருக்கின்றன.
தடை விதிப்பு
இடையில் ஒரிரு தடவைகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நோக்கியும் சில கடிதங்கள் சென்றிருக்கின்றன. அதிலும் ஏட்டிக்கு போட்டி. நீதியை நிலைநாட்டுவது மனித உரிமைகளை உறுதிப்படுத்துவது - இந்த விடயத்தில் இந்தியாவினால் ஒன்றும் செய்ய முடியாது. அது இந்தியாவின் அயலுறவுக் கொள்கையிலும் இல்லை.
அடுத்ததாக ஐக்கிய நாடுகள் சபையினால் என்ன செய்ய முடியுமென்ற பார்த்தால் அதன் நிலைமையோ, அந்தோ பரிதாபம். சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் பிரான்செஸ்கா அல்பானிஸ் என்பவர் மீது தடை வித்திருக்கின்றது.
இவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பாலஸ்தீன விவகாரங்களுக்கான சிறப்பு அறிக்கையாளர். இவர் தனது பொறுப்புக்களுக்கு அப்பால் சென்று அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிராக அரசியல்ரீதியில் செயற்பட்டார் என்னும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் மீது தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.
இவர் மீதான தடையை மறுபரீசீலனை செய்யுமாறும், இது மனித உரிமைகள் பேரவையின் மீதான நம்பகத் தன்மையையும் செயற்பாடுகளையும் பாதிக்கும் என்றும் கூறி, ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டர்க் அமெரிக்காவிற்கு கடிதம் எழுதியிருக்கின்றார்.
ஜ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஒருவர் மீதான தடையை நீக்குங்கள் என்று அவர் அமெரிக்காவிற்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் போது, நாங்களோ இலங்கையிடமிருந்து நீதியை பெற்றுத்தருமாறு அவருக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த இடத்தில்தான் உலக அரசியலை எவ்வாறு புரிந்து கொள்வது என்று தமிழர்கள் படிக்க வேண்டும். தமிழ்ச் சூழலிலுள்ள பெரும் பிரச்சினையே கற்றுக்கொள்ள முயற்சிப்பதில்லை மாறாக, எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது என்னும் கற்பனையில் காலத்தை கடத்திவிட்டு, பின்னர் மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, தங்களது இயலாமையை மறைத்துக் கொள்வது.
இந்தக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது காசாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் - யுத்தம் தொடர்ந்தால் இன்னும் பலர் கொல்லப்படுவார்கள் ஆனால் ஐக்கிய நாடுகள் சபையால் என்ன செய்ய முடிந்தது? இந்தக் கேள்வியின் அடிப்படையில் சிந்தித்தால் நீங்கள் புத்திசாலிகள்.
நமது சூழலில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஜ.சி.சி) தொடர்பில் பலர் பேசியிருக்கின்றனர். இது தொடர்பில் கட்சிகள் மத்தியில் அதிகம் பேசியவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அவர் உலகை அறிந்து பேசுகின்றாரா அல்லது அறியாமல் பேசுகின்றாரா என்னும் கேள்வியை ஒரு பக்கமாக வைப்போம் ஆனால் முயற்சித்தால் உலகை புரிந்து கொள்வது கடினமான விடயமல்ல. நீங்கள் நம்பும் விடயங்களின் மறுபக்கம் என்ன என்பது தொடர்பில் எப்போது அறிவுபூர்மான அவதானம் அவசியம்.
பிரத்தியேக அறிக்கை
ஆராய்ச்சி அவசியம். ஆராய்ந்து அறிவதன் மூலம்தான் உண்மைகளை அறிய முடியும். இன்னொரு உதாரணத்தை பார்ப்போம் - அப்போதைய இலங்கையின் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திரசில்வா 2020இல் அமெரிக்காவினால் தடைப்பட்டியலில் இடப்பட்டார். இதெல்லாம் தங்களால்தான் என்று சிலர் சொல்வதையும் நாம் கடந்து சென்றிருக்கின்றோம். அதனை விடுவோம். இப்போது அதே பட்டியலில்தான் ஜ.நா சிறப்பு அறிக்கையாளரும் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.
அவர் மட்டுமா? கடந்த யூன் மாதம், இன்னும் சிலரையும் அமெரிக்கா கற்றுப்பட்டியிலில் இட்டிருக்கின்றது. அவர்கள்தான் உங்களுக்கான அநீதியை விசாரித்து, நீதியை தரவல்லவர்கள் - அவர்களது பெயர்கள் வருமாறு:
SOLOMY BALUNGI BOSSA LUZ DEL CARMEN IBANEZ CARRANZA REINE ADELAIDE SOPHIE ALAPINI GANSOU BETI HOHLER Ju இவர்கள் நால்வரும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் என்பதை ஒன்றுக்கு பல முறை உச்சரித்துக் கொண்டால் நீங்கள் புத்திசாலிகளாகலாம்.
இதில் இருவரோ, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, அதனை விசாரித்தவர்கள் - மற்றும் இருவரோ, இஸ்ரேல் காசாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி, பிரதமர் நெத்தன்யாகுவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, அவரை கைது செய்யுமாறு தீர்ப்பு வழங்கியவர்கள்.
இப்போது, சர்வதேச நீதிபதிகளும், ஜ.நா சிறப்பு அறிக்கையாளரும் சவேந்திரசில்வாவும் ஒரே தடைப் பட்டியலில்தான் இருக்கின்றனர். இப்போதாவது உலகம் புரிய வேண்டும் அல்லவா. இதன் அடிப்படை என்ன? அமெரிக்கா உலகில் தனியான மேலாதிக்கத்தை விரும்புகின்றது. அந்த மேலாதிக்கத்தின் மீது வேறு எந்தவொரு அமைப்புக்களும் செல்வாக்குச் செலுத்துவதை அமெரிக்கா அனுமதிக்காது.
இது சரியாக அல்லது தவறா என்பது தேவையற்ற கேள்வி. அப்படிக் கேட்பது கூட உலகை புரிந்து கொள்ள முடியாமையின் பலவீனம்தான். ஆனால் அமெரிக்கா ஒரு போதும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை பலமான அமைப்பாக இயங்க அனுமதிக்காது அதே போன்று மனித உரிமைகள் பேரவை சுயாதீனமாக இயங்குவதையும் அனுமதிக்காது.
இதன் பின்னரும் நீங்கள் கடிதம் எழுத விரும்பினால் எழுதுங்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கு அல்ல – மாறாக, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தை நோக்கி எழுதுங்கள். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் மனித உரிமைகள் தொடர்பான பிரத்தியேக அறிக்கை ஒன்றை வெளியிடுகின்றது. இதன் மூலம் உலகெங்கும் மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தின் செழுமையை பாதுகாக்கும் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றது.
இந்த அடிப்படையில் அனைத்து கட்சிகளுமாக, சிவில் சமூகக் குழுக்களாக அமெரிக்காவை நோக்கி கோரிக்கைகளை முன்வையுங்கள். விளைவுகள் என்ன என்பதை விட, அவ்வாறு நீங்கள் செயற்படும் போது ஆகக் குறைந்தது, உலகை புரிந்து கொண்டு செயற்படுகின்றோம் என்னும் திருப்தியாவது மிஞ்சலாம் அல்லவா!
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 25 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.





உலக அரசியல் பற்றி ஒரு கேள்வி - யாரை நோக்கி கடிதம் எழுத வேண்டும்! 17 மணி நேரம் முன்

நீட் தேர்வில் 99.9 சதவீதத்துடன் முதலிடம் பிடித்த மாணவி யார்? இவரின் வெற்றிக்கான ரகசியம் News Lankasri
