நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை - மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வரத் துடிக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் அஞ்சப்போவதில்லை, பிரதமர் ஒரு பெண் என்பதற்காக அவர் மீது குற்றம் சுமத்தி, பலவீனப்படுத்த நினைக்கின்றார்கள் என தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், பிரதமர் மிகவும் தைரியமாகத் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். அவரை எமது அரசு பாதுகாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கல்விச் சீர்திருத்தங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானவை என்பதை ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். எனினும், 6ஆம் தர ஆங்கிலப் பாடத் தொகுதியில் ஏற்பட்ட ஒரு சிறு தவறை அடிப்படையாகக் கொண்டு, ஒட்டுமொத்த கல்விச் சீர்திருத்தத்தையுமே விமர்சிப்பது முறையற்றது.
இந்தத் தவறு குறித்து கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் ஆகியன தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
விசாரணைகளின் முடிவில் உண்மை வெளிவரும். இதைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் தவறான பிம்பத்தை காண்பிக்க முயற்சிக்கின்றன, மக்கள் அதற்கு ஏமாற வேண்டாம். சர்ச்சைக்குரிய அந்த தகவல் ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டது.

பிரதமருக்கு துணையாக நிற்போம்
மேலும், பிரதமர் ஹரிணி அமரசூரியவை இலக்கு வைத்து எதிர்க்கட்சியினர் கொண்டுவரத் துடிக்கும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் அஞ்சப்போவதில்லை. பிரதமர் ஒரு பெண் என்பதற்காக அவர் மீது குற்றம் சுமத்தி, பலவீனப்படுத்த நினைக்கிறார்கள். எனினும் பிரதமர் மிகவும் தைரியமாகச் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
ஜனாதிபதி உட்பட இந்த அரசு எப்போதும் பிரதமருக்குப் பாதுகாப்பாகவும் துணையாகவும் இருக்கும் என்பதை நான் உறுதியாகக் கூறுகின்றேன். ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் நிலவும் வதந்திகளிலும் உண்மையில்லை. தனியார் மற்றும் பெருந்தோட்டத் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களின் ஊழியர் சேமலாப நிதியைத் தொடர்ந்தும் வழங்கி, மேலதிகமாக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதே எமது நோக்கம்.
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்தம்.. தீவிரமடையும் காற்றின் வேகம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஊழியர் சேமலாப நிதியில் கைவைக்கும் எண்ணம் அரசுக்குக் கிடையாது. எமது அரசு உழைக்கும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு சட்டத்தையும் ஒருபோதும் கொண்டு வராது என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |