உலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
தமது நாட்டில் உற்பத்தியை நிறுத்தியுள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துகளை தேசியமயமாக்குவோம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உலக நாடுகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா இரண்டு வார காலமாக தொடர்ச்சியாக தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
அத்துடன், பல முன்னணி நிறுவனங்கள் தமது சேவையை நிறுத்தியுள்ளன. அந்த வகையில், ரஷ்யாவில் இயங்கி வந்த முன்னணி வெளிநாட்டு கார் உற்பத்தி நிறுவங்கள் தங்களது வாகன உற்பத்தியையும், ஏற்றுமதியையும் நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், தங்களது வாகன தயாரிப்பை மீண்டும் தொடங்காவிட்டால், அவர்களது அனைத்து தொழிற்சாலைகளும் தேசியமயமாக்கப்படும் என ரஷ்யா பகிரங்கமாக மிரட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்த மிரட்டல் உலக நாடுகளை அச்சம்கொள்ள செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹுண்டாய், ரெனால்ட், அவ்டோவாஸ் போன்ற நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை மீளவும் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளன.