சிங்கள முஸ்லிம் மக்களை இப்போதுதான் புரிந்து கொண்டோம்! போராட்டத்தில் ஈடுபடும் சக மக்கள்
பொருளாதார நெருக்கடியின்போது, வேறுபாடுகளைக் கடந்து நடக்கும் போராட்டங்களின்போதுதான் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை முழுமையாகப் புரிந்து கொள்ள முடிகிறது என போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி சாமானிய மக்களை கூடுதலாகப் பாதித்திருக்கிறது. இந்நிலையில் அண்மைய நாட்களாக போராட்ட கலத்தில் ஈடுபடும் மக்கள் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
காலி முகத் திடலில் அரசாங்கத்திற்கு எதிராக நடக்கும் போராட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடித்திருக்கிறது. வார இறுதி நாட்களில் மற்ற நாட்களை விட கூட்டம் அதிகமாக இருக்கிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலையினை தாங்கிக் கொள்ள முடியாத மக்கள் ஆட்சியாளர்களை கடுமையாக திட்டித்தீர்க்கும் அதேவேளை, இலங்கையில் இதுவரை புரையோடிப்போயிருக்கும் பிரச்சினைகள் குறித்தும் இப்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.



