தமிழ் மக்களின் உரிமைக்காகவே குரல் கொடுக்கின்றோம் : சபையில் கோடீஸ்வரன் எம்.பி
சமத்துவம் தொடர்பில் பேசும் தற்போதைய அரசு நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் சரியான முறையில் கையாள வேண்டும் என்றும், கடந்த அரசுகள் செயற்பட்டதைப் போன்று இந்த அரசும் செயற்படக் கூடாது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(04.11.2026) நடைபெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேய்ச்சல் தரைகள் தொடர்பான பிரச்சினை
தொடர்ந்து உரையாற்றுகையில், "இந்த நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றவோ அல்லது ஆட்சியைப் பிளவுபடுத்தவோ இலங்கைத் தமிழரசுக் கட்சி வரவில்லை.

எமது மக்களின் இனப்பிரச்சினைக்கும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கும் எதிராகக் குரல்கொடுப்பதற்காகவே தமிழ் மக்கள் எங்களைத் தெரிவுசெய்துள்ளனர்.
தற்போது ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், வெளிநாடுகளிலிருந்தே பால்மா மற்றும் விவசாயப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
வெளிநாடுகளிலிருந்து தரமற்ற பால்மாவை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து, உள்ளூர் பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்களை அரசு வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும்.
மயிலத்தமடு, மாதவனை மற்றும் வட்டமடு ஆகிய பகுதிகளில் மேய்ச்சல் தரைகள் தொடர்பான பிரச்சினைகளால் பண்ணையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
பண்ணையாளர்களின் கால்நடைகள் படுகொலை செய்யப்படுவதுடன், உணவின்றி உயிரிழக்கும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகின்றது.

மயிலத்தமடு காணிகளை மேய்ச்சல் தரைக்காக விடுவித்துத் தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டதுடன், கொழும்பு மற்றும் ஏறாவூர் நீதிமன்றங்களும் உத்தரவிட்டுள்ளன.
ஆனால் ஜனாதிபதியின் சொல்லுக்கும் நீதிமன்ற உத்தரவுக்கும் அங்குள்ள அதிகாரிகள் மதிப்பளிப்பதில்லையா என்ற கேள்வி எழுகின்றது.
அண்மையில் பண்ணையாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தபோது, மாவட்ட செயலகத்தில் அரச அதிபரைச் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே அனுமதி மறுக்கப்பட்டது.
அதிகாரிகள் இவ்வாறு செயற்படுவது மனித உரிமை மீறலாகும். அதிகாரிகள் ஜனாதிபதியினதும் நீதித்துறையினதும் உத்தரவுகளைத் துஷ்பிரயோகம் செய்யாமல், பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக உரிய தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! சிக்கனமாக பயன்படுத்துமாறு எச்சரிக்கை