தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு எதிராக சர்வதேசம் வரை ஒலித்த குரலை இன்று நாம் இழந்து விட்டோம்! கி.சேயோன்
மட்டக்களப்பு மண்ணில் அன்றைய காலத்தில் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு எதிராக சர்வதேசம் வரை ஒலித்த குரலை நாம் இழந்து விட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில்,
மட்டக்களப்பு மண்ணில் அன்றைய காலத்தில் ஒவ்வொரு நாட்களையும் கடத்துவதென்பது தமிழ்தேசிய வாதிகளுக்கும், தமிழ்த்தேசியத்தை இறுக்கமான கொள்கையாக கொண்டவர்களுக்கும் மிகக் கடினமானதாகவே இருந்தது.
அன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்களின் படுகொலைகளுக்கு எதிராக சர்வதேசம் வரை ஒலித்த குரலை நாம் இழந்து விட்டோம்.
அந்த காலகட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மண்ணில் இருந்து சர்வதேசம் வரை தமிழ் மக்களின் பிரச்சினைகளை கொண்டு சென்றவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராசசிங்கமே. அவரை இழந்து இன்று 16 வருடங்கள் கடந்து விட்டது.
ஆனால் தமிழ் மக்கள் அன்று அனுபவித்த துன்பங்களை இன்றுவரை அனுபவித்தே வருகின்றனர்.
அன்றைய தலைப்புச் செய்திகள் எல்லாமே படுகொலைகளும், கடத்தல்களும் என நீண்டு கொண்டே சென்ற காலம். மனித குலத்திற்கு எதிரான மிகமோசமான படுகொலைகளால் தமிழினமே சிக்குண்டு நிலைகுலைந்து இருந்த காலம் அது.
தமிழ் மக்களை வீதிகளில் வைத்து சுட்டுப்படுகொலை செய்த காலம் அது. அந்த காலத்தில் பலர் ஓடி ஒளிந்து கொண்ட போது துணிச்சலோடு தமிழ்தேசியத்தில் பற்றுக்கொண்டு மக்களோடு மக்களாக நின்று களப்பணி செய்தவர்தான் ஜோசப்பரராசசிங்கம். இவரினுடைய ஆளுமை அபாரமானது.
அரசியல் தளத்தில் பல முக்கிய நிகழ்வுகளை தமிழ்மக்களுக்கெதிராக நடைபெற்ற அநீதிகளை சர்வதேசம் வரைகொண்டு சென்றவர்.
குறிப்பாக பல படுகொலை சம்பவங்களை துணிந்து நின்று வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர். அந்த காலங்களில் லண்டன் பி.பி.சி செய்திகளில் தான் உண்மையான விடயங்கள் வெளிவரும். அதில் ஜோசபின் குரல் அடிக்கடி கேக்கக்கூடியதாக இருந்தது.
சர்வதேச இராஜதந்திரிகளை சந்திபதும், நியாயத்தை கோருவதுமென தமிழரர்களுக்கெதிரான கொடுமைகளுக்கு நீதி வேண்டி நெடும்பயணம் மேற்கொண்ட மாமனிதர். இவரது ஆங்கில புலமை அபாரமானது. எதிரிகளை கூட பேசி இணங்கவைப்பது இவருக்கு இருக்கம் விசேட தகமை.
ஆனால் துரோகிகளால் வீழ்தப்பட்டதுதான் இனத்துக்கான சாபக்கேடு. அதுவும் யேசு பாலன் பிறந்தநாளில் அவரின் சன்னிதியிலே நடு நிசி நேரம் இரத்தக்கறை படிந்த அந்த கணங்களை எந்த மனிதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மனித குலத்தின் அவமானத்தின் மையப்புள்ளி தேவனின் சன்னிதான இரத்தக்கறைகள். ஒரு மக்கள் பிரதிநிதியை, மனித உரிமை காவலனை காவுகொண்டதனால் என்ன விடயத்தை சாதித்க முடிந்தது இந்த கும்பலால்.
இவரின் இழப்பானது இன்னும் ஈடுசெய்முடியாத பேரிழப்பே . 16 வருடங்கள் ஓடிப்போனது. இலட்சியப்பயணங்கள் முடியவில்லை என தெரிவித்துள்ளார்.