மலையக மக்கள் தொடர்பான பாதுகாப்பு எமக்குரியது! அமைச்சர் ஆனந்த விஜேபால..
மலையக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. ஆகவே தோட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் பங்கேற்புடன் கூட்டமொன்றை நடத்துவதற்குரிய ஏற்பாட்டைச் செய்வதற்குத் தயார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி - நீலகாமம், மஸ்கெலியா - மொக்கா தோட்டம், நுவரெலியா - டெல்மா தோட்டம் ஆகிய பகுதிகளில் தோட்ட நிர்வாக தரப்பினரால், தொழிலாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் நாடாளுமன்றத்தில் இன்று(07) கருத்துகளை முன்வைத்தனர்.
நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்
ஜீவன் தொண்டமானின் கருத்து
இதன்போது, ஜீவன் தொண்டமான் கருத்து வெளியிடுகையில்,
"தோட்டப் பகுதிகளில் தாக்குதல்களை நடத்துபவர்கள் கைது செய்யப்படுகின்றனர், பிணை வழங்கப்படுகின்றது என்பது எங்களுக்கும் தெரியும். நிரந்தர தீர்வையே நாம் வலியுறுத்துகின்றோம்" என குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால,
"உங்களது ஆட்சிகாலத்தில் போல விசாரணைகள் தாமதிக்கப்படுவதில்லை. நேற்றுமுன்தினமும், நேற்றும் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்ற உத்தரவுக்கமைய நாம் செயல்படுவோம்.

மேற்படி சம்பவங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இனி இப்படியான சம்பவங்கள் நடப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
இது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடுவதற்கு உங்களுக்கு (மலையகப் பிரதிநிதிகள்) சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு நாம் தயார்.
நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ அல்லது நுவரெலியாவிலோ சந்திப்பை நடத்துவோம். எமது பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்களும் எமது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர். நாம் உரிய தலையீடுகளை மேற்கொண்டுவருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.
மனோ கணேசனின் கருத்து
இதனையடுத்து கருத்து வெளியிட்ட மனோ கணேசன்,
"பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதானிகளை அழையுங்கள், நீங்களும் (அமைச்சர்) வாருங்கள், பொலிஸ்மா அதிபரும் வரட்டும். நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்" என தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, "உங்களது யோசனை தொடர்பில் பிரச்சினை இல்லை. அதற்கான வாய்ப்பு வழங்கப்படும். மலையக மக்கள் தொடர்பில் எமக்குப் பொறுப்பு உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
நொடிக்கு நொடி அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! நீலாங்கரை இல்லத்திலிருந்து பொலிஸாருடன் அவசரமாக புறப்பட்ட விஜய்