தமிழ் இனத்திற்காக மட்டுமே போராடுகிறோம் - சாணக்கியன்
இனத்துக்காகத்தான் நாங்கள் போராடுகிறோமே தவிர ஆசனத்துக்காகப் போராடக்கூடாது என்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்(Rasamanickam Shanakiyan)தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு -வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் சிங்கள மக்களைத் திட்டமிட்டுக் குடியேற்றும் முயற்சிக்குக் கண்டனம் மற்றும் எதிர்ப்புத் தெரிவித்துக் குறித்த இடத்திற்கு விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் இணைந்து தமது கண்டனத்தைத் தெரிவித்து இன்று (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது காராமுனை எமது பிரதேசம், இது மட்டக்களப்பு மண், எமது நிலம் எமக்கு வேண்டும், உள்ளிட்ட பல வசிகங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராடடத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கூறியவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பிலே வாகரை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காரைமுனை என்ற இடத்திலே 82 ஆம் ஆண்டுக்கு முன்னதான காலப்பகுதியில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் ஒரு சில மக்களை, ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சில மக்களை இன்று குடியேற்றுவதற்கு சில திட்டங்களைக் காணி ஆணையாளர் ஆரம்பித்து வைத்திருந்தார்.
இது காதும் காதுமாக வைத்து மறைமுகமாக இரகசியமாக இருட்டடிக்கப்பட்டு செய்த ஒரு விஷயமாகத் தான் நாங்கள் பார்க்கிறோம்.
ஏனெனில் மட்டக்களப்பு மாவட்டத்திலே நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். இந்த கூட்டத்துக்குக் கூட எங்களுக்கு எந்த தகவலும் அறிவிக்கப்படவில்லை.
மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன், மாவட்ட அரசாங்க அதிபர் ஒரு அரசியல் கைதி. ஏனென்றால் இனத்துக்காகத்தான் நாங்கள் போராடுகிறோமே தவிர ஆசனத்துக்காகப் போராடக்கூடாது. அதாவது தங்களுடைய பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இப்படியான தமிழருடைய பிரதேசத்தைக் காட்டிக்கொடுத்து ஒரு மிகப்பெரிய தவறு. அதை நான வன்மையாகக் கண்டிக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.
அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர மேயர்
சரவணபவன், மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், தமிழ், மற்றும் முஸ்லிம்
பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.







