படிப்படியாக குறைவடையும் களனி கங்கையின் நீர்மட்டம்.. கொழும்பில் தற்போதைய நிலவரம்
புதிய இணைப்பு
கொழும்பு மாவட்டத்திற்கு அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படக் காரணமான களனி கங்கை, நாகலகம் வீதி பகுதியில் இருந்து வடியத் தொடங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை 8.50 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று பிற்பகல் 2:00 மணியளவில் 8.45 அடியாகக் குறைந்தது. தற்போது நீர்மட்டம் 8.40 அடியாகக் குறைந்துள்ளதால், வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
களனி ஆற்றின் ஹங்வெல்ல பகுதியில் ஏற்பட்ட சிறிய வெள்ளப்பெருக்கு தொடர்ந்து குறைந்து வருவதாக அறிக்கை கூறுகிறது.
மல்வத்து ஓயாவும் தந்திரிமலையில் அதிக வெள்ளப்பெருக்கை சந்தித்து வருகிறது, தற்போது நீர்மட்டம் சுமார் 9.43 மீட்டர் ஆகும்.
இருப்பினும், ஹொரொவ்பத்தானையில் யான் ஓயா, துனமலையில் அத்தனகலு ஓயா மற்றும் இரத்தினபுரியில் களு கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் இன்னும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாகவும், ஆனால் அது குறையத் தொடங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக, ஹன்வெல்ல மற்றும் அதன் கீழ் பகுதிகளில் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் அதனை பார்வையிட செல்லும் பயணங்களை தவிர்க்குமாறு நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஹன்வெல்ல அளவீட்டு நிலையத்தின் நீர்மட்டம் 9.78 மீட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பாரிய வெள்ள நிலைமைக்கு அருகில் உள்ளது என்று நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம்
களனி ஆற்றுப் படுகையின் நீர்மட்டம் அதிகரித்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மை பணிப்பாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நாகலகம் வீதிகளில் உள்ள அளவீட்டு அளவீடு 8.35 அடியாகக் காட்டப்பட்டுள்ளது. இது சமீபத்திய வரலாற்றில் மிக உயர்ந்த நீர் மட்டமாகும் என நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.
நீர்மட்டம் அதே மட்டத்தில் இருக்கும் எனவும் நீர் மட்டத்தில் எந்த அதிகரிப்பும் இருக்காது என்றும், களனி விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வெள்ள அணை தற்போது எதிர்பார்த்ததற்கமைய, அதிகபட்ச நீர் மட்டத்தை எட்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.
ஆபத்தான பகுதியை அண்டியுள்ள மக்கள் விடுக்கப்படும் எச்சரிக்கை அறிவித்தல்களை கவனமாக பின்பற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.